மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

மீண்டும் மீண்டும் கருக்கு முக்கிய சாலையில் உருவாகும் ராட்சத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கருக்கு முக்கிய சாலை
கருக்கு முக்கிய சாலை
Updated on
2 min read

சென்னை: சென்னைக்கு அருகே அம்பத்தூரின் உள் பகுதியான கருக்கு முக்கிய சாலையில் அடிக்கடி உருவாகும் ராட்சத பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு முறை, இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர், பைக்குடன் பள்ளத்தில் விழ, அவரை ராட்சத கிரேன் வந்து தூக்கிய விடியோக்களைப் பார்க்கும் எவர் ஒருவருக்கும் உள்ளுக்குள் அச்சம் எழத்தான் செய்யும்.

ஒன்றிரண்டு முறை அல்ல, கருக்கு முக்கிய சாலையில் தற்போது ஆறாவது முறையாக பள்ளம் உருவாகியிருக்கிறது. தற்போது பள்ளம் உருவான இடத்திலேயே இது நான்காவது முறை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் நீர் கசிவு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் ஏற்படுவதாகவும் இந்த முறை 7 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் ஒரு வாரத்துக்கும் மேல் அந்த சாலை மூடப்படும். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ஒரே ஒரு சாலை இதுதான். அது மூடப்பட்டால், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மக்கள் சுற்றித்தான் செல்ல வேண்டும். அந்த சாலைக்கு இதுவரை ஒரு மாற்றுச் சாலையும் ஏற்படுத்தப்படவில்லை.

2025ஆம் ஆண்டு மட்டும் இந்த சாலையில் ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர், அக்டோபரில் இரண்டு முறை என மிகப்பெரிய ராட்சதப் பள்ளங்கள் உருவாகியுள்ளது.

ஏற்கனவே, இரண்டு, மூன்று முறைக்கு மேல், கருக்கு ஆலமரம் அருகே பள்ளம் ஏற்பட்ட இடத்திலேயே ஜனவரி 26ஆம் தேதி மீண்டும் பள்ளம் விழுந்துள்ளது. இதனால், அப்பகுதியே சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

இதனால், அம்பத்தூர் மட்டுமல்ல ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து அம்பத்தூர் எஸ்டேட் சாலையைக் கடக்காமல் விரைவாக இந்த கருக்கு முக்கிய சாலை வழியாக கொரட்டூர் வரை செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். என்ன நடந்தது என்று தெரியாமல் செவ்வாய்க்கிழமை முதல் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்புகளைப் பார்த்துவிட்டு வேறு சாலைகளைப் பயன்படுத்தி கருக்கு சாலையை அடைய முயன்று, சுழலில் சிக்கிக் கொண்டனர் வாகன ஓட்டிகள்.

கருக்கு முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டிருப்பது, அம்பத்தூர் பேருந்து நிலையத்திலேயே ஏதேனும் ஒரு வகையில் அறிவிக்கப்பட்டிருந்தால் அனைவரும் டன்லப் வழியாகச் சென்றிருப்பார்கள். ஆனால் அம்பத்தூரிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு கருக்கு வந்த பிறகு சாலை மூடப்பட்டிருந்தால், மீண்டும் சுற்றிச் செல்வதற்கு பதிலாக மாற்றுப் பாதையைத்தான் தேடி அலைந்தார்கள்.

ஆனால், உண்மையில் துயரம் என்னவென்றால், அந்த கருக்கு முக்கிய சாலைக்கு ஒரு மாற்றுச் சாலை என்பதே இல்லை. முதல் இரண்டு நாள்கள் இந்த வழி போக்குவரத்து இன்றி முடங்கியது. இதன் எதிரொலியாக அம்பத்தூர் முதல் எஸ்டேட் வரை சாலைகள் இரு சக்கர வாகனங்களால் சூழப்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. நகர முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

பிறகுதான், வெறும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் அளவுக்கு கருக்கு பகுதியில் ஒரு சிறிய சாலை உருவாக்கப்பட்டது. அதில் ஒரு ஆட்டோ தப்பித் தவறியும் வந்துவிட்டால் கிரைண்டரில் சிக்கிய எலிதான் அனைத்து வாகன ஓட்டிகளின் நிலையும். அங்கேயே தவமிருந்து வரம் கிடைத்தால் வீட்டை அடையலாம்.

இந்தநிலைதான் திங்கள்முதல் நிலவுகிறது. மறுபக்கம் மாநகராட்சி பணியாளர்களும் மெட்ரோ ஊழியர்களும் சேர்ந்து ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எத்தனை முறை பள்ளத்தை மண் கொட்டி மூடினாலும் மீண்டும் மீண்டும் அதே அளவில் ராட்சத பள்ளம் உருவாகிவிடுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பாதையில் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், இந்த சாலைக்கு இணையான ஒரு மாற்றுச் சாலையும் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுச் சாலை இல்லாவிட்டால், ஒரு பள்ளமோ விபத்தோ நேரிட்டால் அனைத்து வாகன ஓட்டிகளையும் இந்த சாலைக்குள் செல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டால் போதுமா.. அவர்கள் போக மாற்றுச் சாலை வேண்டாமா? 100 மீட்டரிலோ 500 மீட்டரிலோ இருக்கும் ஊரை 10 அல்லது 15 கிலோ மீட்டர் சுற்றித்தான் செல்ல வேண்டும் என்றால் அது சரியாகாது. பொதுப் பணித் துறை அதிகாரிகள் இந்த இடத்தில் ஆய்வு செய்து, பள்ளம் விழுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு நிரந்தர தீர்வுடன், இந்த சாலைக்கு ஒரு மாற்றுச் சாலையை உருவாக்குவது எதிர்காலத்துக்கும் உகந்ததாக இருக்கும்.

Summary

Motorists are suffering due to the huge pothole that repeatedly forms on the main road in Karukku.

கருக்கு முக்கிய சாலை
பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com