

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்.1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், ராக்கெட் வேகத்தை விடவும் பல மடங்கு வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலையைக் குறைக்க மத்திய பட்ஜெட்டில் திட்டம் இருக்கிறதா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
உயர்ந்து வரும் தங்கம் விலையை, மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ஒரு சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்தாலே போதும், உயர்ந்து வரும் வேகத்தை சற்றுக் குறைக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களாக இருந்தால் பட்ஜெட் தாக்கலாகும் வரை பொருத்திருக்கலாம் என்பதே பலரது அறிவுரை.
ஆனால், உண்மையில் என்னென்ன அறிவிப்புகள் வந்தால் தங்கம் விலை குறையலாம் என்று ஒரு பட்டியல் வெளியாகிறது.
2026-27 மத்திய பட்ஜெட் ஒரு சில நாள்களில் தாக்கலாகவிருக்கிறது. பட்ஜெட் என்றாலே பல்வேறு துறைகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையினருக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், விலை அதிகரிப்பால் வாங்கும் தேவை குறைந்திருப்பது மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவற்றை எதிர்கொள்ள மத்திய அரசு ஒரு சாதகமான ஆதரவை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
தங்க நகைத் துறையினருக்கு மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டினால் மட்டுமே சவால்களை எதிர்கொள்ளவும் தங்க நகை ஏற்றுமதியை அதிகரித்து வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்பது அவர்கள் வாதம்.
இறக்குமதி வரி
தங்க நகைத் துறையின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ரத்தினக் கற்கள் போன்ற மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பது. அதாவது, இந்த உலோகங்களைப் பொருத்தவரை இந்தியா இறக்குமதியையே பெரிய அளவில் சார்ந்துள்ளது, எனவே, இறக்குமதி வரி அதிகமாக இருப்பது உற்பத்திச் செலவை அதிகரிக்கும், அதிக விலை காரணமாக இந்திய நகைகள், சர்வதேச சந்தைகளில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படும். எனவே, இறக்குமதி வரியைக் குறைத்தால், உற்பத்திச் செலவு குறையும், தங்க நகைகள் விலை குறைந்தால் ஏற்றுமதியை மேம்படுத்தி, சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள்.
மற்றொரு கோரிக்கை சுங்க நடைமுறைகளை எளிமையாக்குவது, ஏற்றுமதியாளர்கள் அவ்வப்போது, அனுமதி கிடைக்க நீண்ட கால காத்திருப்பு காரணமாக தாமதங்களை சந்திக்கிறார்கள். எனவே, விரைவான சுங்க அனுமதி, டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக் கொள்வது போன்றவை உரிய நேரத்தில் தங்க நகைகளை ஏற்றுமதி செய்ய உதவும்.
இந்தியாவை, உலகின் நகை உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்துகிறார்கள்.
விலையைக் குறைக்க..
நாட்டில்,தங்க நகை விலைகளில் ஜிஎஸ்டி ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. நகைகள் மீதான ஜிஎஸ்டியை தற்போதைய 3 சதவிகிதத்தில் இருந்து 1 முதல் 1.25 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று நகைத் துறையினர் வலியுறுத்துகிறார்கள்.
ஜிஎஸ்டி குறைப்பால், ஒரு பக்கம் தங்க நகை உற்பத்தி செலவு குறைவதோடு, பல தங்க நகை உற்பத்தியாளர்கள் நேர்மையாக தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் என்கிறார்கள். விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளிவைப்பதாகவும், விலைகள் குறைந்தால்தான், வாங்குவது அதிகரித்து, உற்பத்தி முதல் விற்பனையாளர்கள் வரை வேலை வாய்ப்புகளை கூட்ட முடியும் என்கிறார்கள்.
சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் என்று நகை விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
தங்க நகைக் கடைகளில், நிதி ஆதார மையங்களின் ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்கி, தவணை முறையில் பணத்தை செலுத்தும் முறையை மத்திய நிதியமைச்சர் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
மற்றொருபக்கம், இளைஞர்களிடையே, நகை உற்பத்தி பயிற்சி மற்றும் நகை தயாரிப்புக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான், அடுத்து வரும் காலத்திலும் சர்வதேச போட்டிகளை இந்திய நகைத் துறை எதிர்கொள்ளும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
சுங்க அனுமதி விரைவு, இறக்குமதி வரி குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி குறைப்பு என நகைத் துறையினர் பல்வேறு சலுகைகளை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இவை, மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதை பிப். 1 வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.