

பழைய வரி விதிப்பு முறையிலிருந்து மாறி, தற்போது புதிய வரி விதிப்பு முறை ஒன்றே தெரிவாக இருக்கும் நிலையில், சில முக்கிய சலுகைகளுடன், வரி விகிதங்களில் குறைவு என சமநிலையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, புதிய வரி விதிப்பு முறையில், வீட்டுக் கடன்கள், மருத்துவக் காப்பீடுகளுக்கு சலுகை அறிவிப்புகள் மற்றும் வேறு சில சலுகைகளும் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவின் சுகாதார அமைப்பு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மருத்துவ பணவீக்கம் நிலவுகிறது. இது 11.5 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் என கணிக்கப்படுகிறது. இது ஆசியாவிலேயே மிக உயர்ந்த பணவீக்க விகிதமாகவும் மாறியிருக்கிறது.
ஏற்கனவே, மருத்துவக் காப்பீடு தவணைகளுக்கான ஜிஎஸ்டி ரத்து மற்றும் காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதி போன்றவை, சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. எனினும், தற்போதைய மருத்துவச் செலவுகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் பலரும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.
அதாவது, புதிய வருமான வரி முறையில், வரிச் சலுகைக்கான பட்டியலில் வீட்டுக் கடனுக்கான வட்டி, மருத்துவக் காப்பீடு பிரிவு 80டி- இன் கீழ் (தனிநபர்/குடும்பத்திற்கு ரூ. 50,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது), ஆண்டுக்கு ரூ.30 முதல் 50 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பு, வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு சற்று பொருளாதார சுமைகளைக் குறைத்து, ஒரு சமநிலையான நிம்மதியைக் கொடுக்கலாம் என்கிறார்கள்.
இந்த செலவினங்கள் குறைந்தால், சிறிய குடும்பங்களும் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை பெறலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மத்திய பட்ஜெட் 2026 விரைவில் தாக்கலாகும் நிலையில், மருத்துவ காப்பீடு தவணைத் தொகையை குறைப்பதன் மூலம், மக்கள் மருத்துவக் காப்பீடுகளை செய்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்யும்.
தற்போது, இந்தியாவின் மக்களுக்கான சுகாதாரச் செலவு உலகளாவிய விகிதாச்சாரத்தைவிடக் குறைவாகவே உள்ளது, எனவே, வரும் பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கவனம் செலுத்தி, ஆரம்பநிலை மருத்துவமனைகளின் கூட்டமைப்பை வலுப்படுத்தி, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, மருத்துவச் செலவினங்களால் மக்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாம் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.