தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதாகத் தெரிவித்திருந்தார். சென்னையில் இருந்து திருச்சி கிழக்கில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு மத்தியில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சியில் விஜய் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜய் போட்டியிட்டதால், திருச்சி கிழக்கு நட்சத்திர தொகுதியாக கருதப்பட்டது.
விஜய் மற்றும் அப்போதைய திமுக எம்.எல்.ஏவான இனிகோ இருதயராஜை எதிர்த்து அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்டக் கழக பொருளாளர் ஜி.ராஜசேகரன் களமிறக்கப்பட்டார்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி. அதிமுக வேட்பாளரான ராஜசேகரன் 19,715 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்திருந்தார். விஜய் 91,381 வாக்குகளையும், திமுக வேட்பாளர் எஸ். இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டக் கழக பொருளாளராகவும், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் கழக வேட்பாளராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றவன்.
இந்த மகத்தான பொறுப்புகளை எனக்கு வழங்கி, மக்கள் பணியாற்றும் வாய்ப்பை அளித்த தங்களுக்கும், கழகத்தின் மூத்த நிர்வாகிகள், சக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்களான அன்புத் தொண்டர்கள் மற்றும் எனது அரசியல் பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் என்னால் இயன்ற அளவில் முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றி வந்துள்ளேன். கழகம் வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் என் கடமையாகக் கருதி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டேன்.
இருப்பினும், அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள், மக்கள் நலன் குறித்த எனது பார்வை. எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடனும் கலங்கிய மனத்துடனும் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சி தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் பொறுப்பு உள்ளிட்ட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இன்றைய தினம் முதல் விலகுகின்றேன்.
இதுவரை என்னுடன் பயணித்த கழகத்தின் மூத்த நிர்வாகிகள், சக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்களான அன்புத் தொண்டர்கள் மற்றும் எனது அரசியல் பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு. இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியுடன் விலகுகிறேன். எனது ராஜினாமாவை ஏற்று, அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary
Rajasekaran, who contested against Tamizhaga Vettri Kazhagam leader Vijay in the Trichy East constituency and lost, has announced his resignation from the AIADMK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








