/

அரசியல் எதிரியை எதிர்க்க விரும்பினால் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்: தமிழிசை

அரசியல் எதிரியை எதிர்க்க விரும்பினால் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என தமிழிசை கூறியிருப்பது...

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 2:55 pm IST

சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை ஆதரித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுவெளியில் அரசியல் எதிரியை எதிர்க்க விரும்பினால், அனைவரும் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருச்செந்தூா் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறான கருத்துகளையும், ஒருமையிலும் பேசியதாக, தவெக நகரச் செயலா் செல்வம் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூா் போலீஸாா் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘ஆளுங்கட்சி நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். அது தொடா்பாக பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில் விமா்சித்துப் பேசினேன். அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது போலீஸாா் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனா். எனவே, எனக்கு முன்பிணை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிறகு, அவர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்

இந்த நிலையில், பொதுவெளியில் அரசியல் எதிரியை எதிர்க்கவும் விமர்சிக்கவும் விரும்பினால், அனைவரும் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் தெலங்கானா ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் தவெக அரசை ஆதரித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ​​விஜய் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கவில்லை; திமுகவில் உள்ள பல நிர்வாகிகள் ஆணவத்துடனும் இழிவாகவும் பேசுகிறார்கள்; நாங்களே (பாஜக) அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் அனைவரும் தங்கள் பேச்சில் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தமிழிசையின் கருத்து "முற்றிலும் அரசியல் சாராதது" என்று பாஜக நிர்வாகிகள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

"அவதூறுக்கு எதிரான தவெக அரசின் கடுமையான சட்ட நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலம், தவெக-வுடன் ஒரு உறவு பாலத்தை அமைப்பதை விட, திமுகவின் அரசியல் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தவே பாஜக முயல்கிறது," என்று பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை மறுத்த வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "அவரை யாரும் ராஜிநாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தவில்லை" என்றும் அழுத்தம் கொடுத்த நபரின் பெயர்களை பொதுவெளியில் அறிவிக்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் சவால் விடுத்தார்.

காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்திய மாநில சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், இது அரசின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை அல்லது கவனத்தைத் திசைதிருப்பும் உத்தி என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

தற்போதைய ஆட்சியில் காவல்துறை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதாக நிர்மல்குமார் தெரிவித்தார்.

"கடந்த காலங்களில், திமுக அல்லது அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போதெல்லாம், திரைக்குப் பின்னாலேயே சமரசங்களும் உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படும்," என்றும் ஆனால், அந்தக் காலம் முடிந்துவிட்டது என்று நிர்மல்குமார் கூறினார்.

முதல்வர் விஜய்யின் அரசு, திரைமறைவு அரசியல் சமரசங்களை நம்பாமல், சாமானிய மக்களுக்குப் பொறுப்புடன் செயல்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனை நேரடியாகச் சாடிய நிர்மல்குமார், ராதாகிருஷ்ணனின் நடத்தையை "பொதுவெளியில் ரௌடித்தனம் செய்வது" என்று வர்ணித்தார்.

திமுக தலைவர் ஒருவரை அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த நிர்மல்குமார் "அவர் எத்தகைய பரிகாரம் செய்தாலும் சரி, அவரைப் போன்ற ஒருவரை தவெக கட்சியில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ள மாட்டோம். கண்ணியம் குறைவான வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துபவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவே தகுதியானவர்," என்று அமைச்சர் கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திமுக மற்றும் ஆளும் கட்சியான தவெக இடையிலான அரசியல் மோதல் ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியது.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு ஆளும் கட்சியான தவெக தன்னை வற்புறுத்தியதாக அந்த திமுக எம்எல்ஏ மீண்டும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

Summary

Senior BJP leader Tamilisai Soundararajan on Saturday defended supporting the arrest of former DMK minister Anitha R Radhakrishnan over comments against Chief Minister C Joseph Vijay ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.