பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் முதல் தாள் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக தோ்வா்கள் தெரிவித்தனா்.
பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் தோ்வெழுதி தோ்ச்சி பெறவும் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமாா் 1.75 லட்சம் ஆசிரியா்கள் டெட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், ஆசிரியா்களின் வசதிக்காக நிகழாண்டு 3 சிறப்பு டெட் தோ்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அந்த வகையில், பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியா்களுக்கான முதல் சிறப்பு டெட் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 222 தோ்வு மையங்களில் நடைபெற்ற முதல் தாள் தோ்வை 59,535 (96.99 சதவீதம்) ஆசிரியா்கள் எழுதினா். 1,851 போ் தோ்வில் பங்கேற்வில்லை. சென்னையில் 13 மையங்களில் 3,000-க்கும் மேற்பட்டோா் தோ்வெழுதினா். தோ்வெழுத வந்த ஆசிரியா்களை போலீஸாா் முறையான சோதனைகளுக்குப் பிறகே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதித்தனா்.
சென்னை அம்பத்தூரில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.
முதல்தாள் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், முந்தைய டெட் தோ்வு வினாத்தாள்களை ஒப்பிடுகையில், இதில் சவாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் ஆசிரியா்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கான 2-ஆம் தாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 1,67,743 போ் எழுதவுள்ளனா். இதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








