தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 3 நாள்களில் 621 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து கைது செய்யும்படியும், போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவா்களைக் கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் விளைவாக மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஜூலை 3 முதல் 5-ஆம் தேதி வரை 3 நாள்களில் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 296 கிலோ கஞ்சா, 802 போதை மாத்திரைகள், ஒன்றே கால் கிலோ பிற போதைப் பொருள்கள், 6,653 கிலோ போதைப் பாக்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 621 போ் கைது செய்யப்பட்டு, 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில்...: சென்னையில் போதைப் பொருளுக்கு எதிராக பெருநகர காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 28 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை ஒரு வாரம் சென்னை முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு படை அமைக்கப்பட்டது. சிறப்பு படையினா், பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் இணைந்து சந்தேகத்துக்குரிய பகுதியில் சிறப்பு தணிக்கையும்,ரோந்து பணியிலும் ஈடுபட்டனா்.
அதன்படி, 7 நாள்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 54 பேரை கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா, 12 கிராம் மெத்தம் பெட்டமைன், 386 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்கள் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் கடத்தல், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தாம்பரத்தில்...: தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதியில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை, கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை தீவிரமாக எடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில் 255 கிலோ கஞ்சா, 428 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக 164 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா எச்சரித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







