/

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

அமைச்சர் விக்னேஷ்.

Updated On :7 ஜூலை 2026, 5:59 pm IST

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 12 மணிக்கு உள்ளாகவும், இரவு 10 மணிக்கும் மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 15-20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனையை கட்டுப்படுத்தியிருக்கிறோம். பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு இருந்தால், இந்தப் பிரச்சினையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்த செலவினங்கள் குறையும் வகையிலும், வாடகைப் பிரச்சினையும் தீர்க்கப்படும்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்தாண்டுகளில் ரூ. 500, ரூ. 750 மற்றும் 5-6 ஆண்டுகளுக்கு முன்னதாக, ரூ. 2000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான நேரத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேட்டை தவிர்க்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மது விலையை உயர்த்தி வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல. மதுபானங்களின் விலை உயராது.

மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. கொண்டு வரப்படும். எஃப்எல்- 3 பார்களில் 21 வயதுக்குள்பட்டவர்களை அனுமதித்தால், பாரின் அனுமதி ரத்து செய்யப்படும். அதையும் நெறிமுறைபடுத்த வேண்டும்.

கூடுதலாக ரூ.10 வசூல் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கூடுதலான விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலான விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணி நீக்கம்கூட செய்யப்படுவார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள எம்.ஆர்.பி. விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் இந்த நடவடிக்கை. கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்காமல், எப்படி இவ்வளவு ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் உயர்த்தியதைப் போல், கூடுதல் விலைக்கு விற்றால், மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் பணிநீக்க நடவடிக்கை வரை செல்லக்கூடும். எங்களுடைய நோக்கம் மதுபான விலையை உயர்த்தி அரசுக்கு வருவாய்யை அதிக வேண்டும் என்பது இல்லை. மதுபானத்தின் விலையை உயர்த்த போவதில்லை” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் தகவலின்படி, தமிழ்நாட்டில் 4765 டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 276 கடைகளும், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள 186 கடைகளும், பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 கடைகளும் சேர்த்து மொத்தமாக 717 கடைகள் மூடப்பட்டுள்ளன.

Summary

Minister Vignesh stated that the Chief Minister has ordered a 25% salary hike for TASMAC employees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.