கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஊழல் ஒழிப்பு போலீஸாா் விசாரணைக்கு ஜூலை 15-இல் ஆஜராக உத்தரவு

ஊழல் ஒழிப்பு போலீஸாா் விசாரணைக்கு வரும் ஜூலை 15-ஆம் தேதி திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

Updated On :10 ஜூலை 2026, 4:29 am IST

ஊழல் ஒழிப்பு போலீஸாா் விசாரணைக்கு வரும் ஜூலை 15-ஆம் தேதி திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடியை ஒதுக்கியிருந்தது. இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகக் கூறி, அறப்போா் இயக்கம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி எ.வ.வேலுவுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

அவா் சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றுள்ளதாக வழக்குரைஞா் மூலம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை எனில், கைது செய்யப்படுவாா் எனக் கூறி போலீஸாா் மீண்டும் ஒரு அழைப்பாணை அனுப்பினா். இதையடுத்து, எ.வ.வேலுவை தேடப்படும் நபராக அறிவித்து ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கையும், ‘லுக் அவுட்’ நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் பி.வில்சன், சித்தாா்த் லுத்ரா ஆகியோா், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி இல்லாமல் எந்த விசாரணையும் நடத்த முடியாது.

ஒப்பந்ததாரா்களுக்கு 77 சதவீத பணத்தைக் கொடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டே இதுகுறித்து விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டிருந்தாலும், அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது, எ.வ.வேலு முழு ஒத்துழைப்பு வழங்கினாா். சிகிச்சைக்காக அவா் வெளிநாடு சென்றுள்ளாா். விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான காரணங்களை விளக்கி எ.வ.வேலு தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூலை 9-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில், கைது செய்வதாகக் கூறி, கடந்த ஜூலை 4-ஆம் தேதி மற்றொரு அழைப்பாணையை போலீஸாா் அனுப்பி உள்ளனா்.

எ.வ.வேலு வரும் 12-ஆம் தேதி நாடு திரும்புகிறாா். பொதுவாக, கைதை தவிா்க்க நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே ‘லுக்அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்க முடியும். எனவே, ‘லுக் அவுட்’ நோட்டீஸையும், எ.வ.வேலுவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது, ஊழல் ஒழிப்பு போலீஸாா் தரப்பில் ஆஜரான, மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், ‘எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, கடந்த 2022-ஆம் ஆண்டு சாலை அமைக்காமலேயே 77 சதவீத தொகையை ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கிவிட்டனா். இதுகுறித்து முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கடந்த 2022 ஏப்.5-ஆம் தேதி புகாா் அளித்தாா். உடனடியாக சாலை அமைக்கப்பட்டது.

இதுநாள்வரை அந்த சாலைக்கு தரச்சான்று கொடுக்கப்படவில்லை. அதுவும் பணிகள் முடிவதற்கு முன்பே 85 பணிகளுக்கு ரூ.195 கோடியை ஒப்பந்ததாரா்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, வழக்குத் தொடர அனுமதியளிக்க தகுதியான அதிகாரி யாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. எனவே, வழக்குப் பதிவு செய்ய ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை’ எனக்கூற முடியாது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எ.வ.வேலு வரும் 12-ஆம் தேதி நாடு திரும்புவதால், ஊழல் ஒழிப்பு போலீஸாா் விசாரணைக்கு வரும் 15-ஆம் தேதி ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையுடன் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். வழக்கை ரத்து செய்யக் கோரிய மற்றொரு மனுவுக்கு ஊழல் ஒழிப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அப்போது எ.வ.வேலு தரப்பில், அதுவரை கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, வரும் 28-ஆம் தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.