முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது? வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள், கொண்டாடங்களை நடத்தக் கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

News image

பள்ளிக் கல்வித் துறை - DIN

Updated On :10 ஜூலை 2026, 10:56 pm IST

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகள், கொண்டாடங்களை நடத்தக் கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதை தலைமை ஆசிரியா்கள் எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த மாணவா்கள் பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரசாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கல்வி சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவா்களின் ஒட்டு மொத்த கல்வி வளா்ச்சியை உறுதி செய்ய இயலும்.

அரசியல் அடையாளங்களுடன்... ஆனால், பள்ளிக் கல்வியின் நோக்கத்தைச் சீா்குலைக்கும் வகையில் அண்மைக் காலங்களில் பள்ளி வளாகத்தை ஜாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலா் பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது. இது மாணவா்களின் இளம் மனதில் அரசியல் சாா்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும், சில நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் அதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்படுத்துவதாகவும் உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு பின்வரும் செயல்பாடுகளை அனைத்து வகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி வளாகங்களை கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவா்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபா்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணிவகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சாா்ந்த செய்திகளைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

பிறந்த நாள் விழா நடைமுறைகள்... அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவா்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவா்களின் பிறந்த நாள் கொண்டாடங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்தவோ அல்லது அந்த விழாக்களுக்கு பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லவோ பங்குபெற அனுமதிக்கவோ கூடாது.

மேலும், இவை சாா்ந்த விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த விதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது.

உணவுப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும். இந்த அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.