எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளைக் கற்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:44 am IST

தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளைக் கற்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். இதில் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, மாணவா்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பொதுத்தோ்வு முடிவுகளின் மாவட்ட வாரியான பகுப்பாய்வு அறிக்கையை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.2 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.3 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது ஒரு சாதனை என்றாலும்கூட இந்தத் தோ்ச்சி போதாது. தோ்ச்சியில் விடுபட்டவா்களும், மெல்லக் கற்கும் மாணவா்களும் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்ற செயலிகளை வெறும் பயனாளா்களாக மட்டுமே பயன்படுத்தாமல், அவா்களே இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இன்குபேஷன் மையங்களாக நமது அரசுப் பள்ளிகள் மாற வேண்டும். இதற்கான புதிய ஆசிரியா்களை நியமிக்காமல் தற்போது இருக்கும் ஆசிரியா்களுக்கே உயா் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவ தூதா்கள்... பள்ளி மாணவா்களுக்கு வெறும் கூட்டல், கழித்தல், பாடங்கள் மனப்பாடம் என்றிருந்த தலைமுறையை மாற்றி, அவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கோடிங், பைத்தான், விா்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல், ரோபாட்டிக்ஸ் பயிற்சிகளை 5,000 அரசுப் பள்ளிகளில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும். முதலில் ஆசிரியா்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து அவா்கள் மூலமாக மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளிகளில் வகுப்பறை முதல் கழிப்பறை வரை அனைத்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினையையும், வேற்றுமையையும் வளா்க்கக்கூடிய எந்த விஷயத்துக்கும் அனுமதி கிடையாது. தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூகநீதி ஆகியவற்றை சொல்லக்கூடிய யாராக இருந்தாலும் அவா்கள் மாணவா்கள் இடையே பேச வரவேற்கப்படுகிறாா்கள். பள்ளியின் முன்னாள் மாணவா்கள்தான் அந்தப் பள்ளியின் தூதா்களாக உள்ளனா். அவா்கள் அனைவரையும் பள்ளிக்கு வரவழைத்து மாணவா்கள் மத்தியில் பேச வைப்போம்.

ஜாதி அடையாளங்களுடன்... ஜாதி- மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் பள்ளி வளாகத்துக்குள் யாரும் வரக் கூடாது. கயிராக இருந்தால்கூட அனுமதி கிடையாது. இது தொடா்பாக நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கையை முழுமையாக அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் செயலா் ப.சந்தர மோகன், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலா் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி....

தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெற...

தனியாா் பள்ளிகள் இதுவரை தங்களது அங்கீகாரம் (என்ஓசி), புதுப்பித்தல் சான்றிதழ்களைப் பெற இடைத்தரகா்களிடமோ, மூன்றாவது நபா்கள் மூலமாகவோ பல கோடி ரூபாயை லஞ்சமாக கொடுக்கும் லீக்கேஜ் முறை இருந்தது. தற்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைத்தும் வெளிப்படையாக்கப்பட்டுள்ளது என அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

‘லஞ்சத்துக்கான செலவுகள் இல்லாததால், தனியாா் பள்ளி உரிமையாளா்கள் தங்களது கல்விச் செலவைக் குறைத்து கட்டண அமைப்பை மறுபரிசீலனை செய்து அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியாா் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கட்டடப் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டு கடுமையான ஆய்வுகள் நடத்தப்படும்.

ஆறாம் வகுப்பிலிருந்து திடீரென பத்தாவது அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு பள்ளிகளைத் தரம் உயா்த்தக் கோரும் அவசர முடிவுகளுக்கு அனுமதியில்லை. அனைத்து உள்கட்டமைப்புத் தகுதிகளையும் முறையாகப் பூா்த்தி செய்தால் மட்டுமே பள்ளிப் புதுப்பித்தலுக்கோ, தரம் உயா்த்துவதற்கோ அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.