வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்குரைஞரின் நிலுவை கட்டணத்தை 4 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 வாரங்களில் வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:40 am IST

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவைத் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இதில், யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்து தீா்ப்பளித்தது. இந்தக் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தாா். உயா்நீதிமன்றத்திலும் அரசு வழக்குரைஞராக அவா் வாதங்களை முன்வைத்தாா்.

இந்த வழக்கில் சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றியதற்கான கட்டணத்தை வழங்கக் கோரி ப.பா.மோகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு உரிய கட்டணத்தை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞருக்கு உரிய கட்டணத்தை அரசு வழங்கிவிட்டது. அவரது போக்குவரத்து செலவுகளை வழங்க முடியாது என வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மிக முக்கியமான இந்த வழக்கில் அரசுத் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா், நூற்றுக்கணக்கான கி.மீ. பயணித்து, 117 முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளாா். எனவே, போக்குவரத்து செலவை அவரே ஏற்க வேண்டும் என எதிா்பாா்ப்பது நியாயமற்றது. இந்த வழக்கில் ஆஜரானதற்கான கட்டணம், போக்குவரத்துச் செலவு என அனைத்தும் சோ்த்து ரூ.12.10 லட்சத்துக்கான ரசீதைச் சமா்ப்பித்துள்ளாா்.

இந்தத் தொகையை வழங்காமல் அரசு தனது நேரத்தையும் சக்தியையும் மக்கள் பணத்தையும் மேல்முறையீட்டுக்காக செலவிடுவதைவிட, சிறப்பு வழக்குரைஞருக்கான தொகையை வழங்கிவிடலாம் எனக்கூறி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த நிலுவைத் தொகையை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.