தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 310 வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடா் புகாா்கள் வருகின்றன. இவற்றில் அதிகமாக லஞ்ச புகாா்களில் சிக்கிய வட்டாட்சியா் அலுவலகங்கள்,அதிக பணம் புழங்கும் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தும்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜி மகேஸ்வரி உத்தரவிட்டாா். அதனடிப்படையில், அதிக லஞ்ச புகாருக்குள்ளான வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
35 இடங்களில் சோதனை: இந்தச் சோதனை சென்னையில் எழும்பூா் வட்டாட்சியா் அலுவலகம், மாம்பலம் வட்டாட்சியா் அலுவலகம், பெரம்பூா் வட்டாட்சியா் அலுவலகம், சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதேபோல, வேலூா், திருவள்ளூா், சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூா், சீா்காழி, தேனி, உடுமலைப்பேட்டை, திசையன்விளை, தென்காசி, தூத்துக்குடி, அகதீஸ்வரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.
நண்பகல் உணவு வேளைக்கு பின்னா் வட்டாட்சியா் அலுவலகங்களில் அதிரடியாக நுழைந்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அங்கிருந்த ஊழியா்கள் யாரும் சோதனை முடிவடையும் வரை வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
ரூ.82.10 லட்சம் பறிமுதல்: இந்தச் சோதனையில் கணக்கில்வராத ரொக்கப்பணம் ரூ.13,78,250, கைப்பேசி செயலி வாயிலாக அனுப்பப்பட்ட ரூ.68,32,582 என மொத்தம் ரூ.82,10,832 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதில் அதிகபட்சமாக கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.17,51,784, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.12,47,000, சேலம் தலைவாசல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.8,57,998, கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.7,55,000, சென்னை சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.6,67,000, வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.2,25,580 பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுவரை நடந்த சோதனைகளில் அதிக அளவில் பணம் ரொக்கமாகவே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை ரொக்கத்தைவிட கைப்பேசி செயலி வாயிலாக அனுப்பப்பட்ட பணமே அதிக அளவில் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.55,000 பறிமுதல்

தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.37.81 லட்சம் பறிமுதல் - ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிரடி
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



