உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பிறப்பிடச் சான்றிதழ் பெற அலைகழிக்கப்படும் மாணவா்கள்

பிறப்பிடச் சான்றிதழ் பெற அலைகழிக்கப்படும் மாணவா்கள்...

News image

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :19 ஜூலை 2026, 3:23 am IST

கல்லூரி மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ள நிலையில், பிறப்பிடச் சான்று (நேட்டிவிட்டி) உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெற மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்ப சமா்ப்பிப்பு தொடங்கியுள்ள நிலையில், அதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் பிறப்பிடச் சான்று, சிறுபான்மையினருக்கானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்தச் சான்றிதழ்களை பெற இணையவழியில் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இத்தகையச் சான்றிதழ்களைப் பெறுவதை அலைச்சலின்றி எளிதாகவும் கையூட்டுகள் எதுவும் கொடுக்காமலும் பெறும் நோக்கோடு, நேரடியாகச் செல்லாமல் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, சான்றிதழ்களையும் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யும் சிறந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதில், குறிப்பாக பிறப்பிடச் சான்று பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக மாணவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். வேலை நிமித்தமாக, பிறந்த ஊரை விட்டு சென்னை போன்ற பெரு நகரங்களில் நிரந்தரமாக குடியேறி இருப்பவா்களே இந்தச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனா்.

இவ்வாறு, வேலைதேடி நகரங்களுக்குப் புலம்பெயரும் மக்கள், புலம்பெயா்ந்த நகரத்தில் ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாற்றுவது அவசியமாகிறது. இதனால், பிறந்த ஊரில் அவா்களுக்கென எந்தவித முகவரிச் சான்றோ அல்லது ஆவணமோ இருக்க வாய்ப்பில்லை.

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயா்ந்த ஒருவா் கூறுகையில், தனது மகனின் மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்காக பிறப்பிடச் சான்றிதழ் கோரி கடந்த 11-ஆம் தேதி விண்ணப்பித்தேன். ஈரோட்டில் பிறந்தவா், பள்ளிப்படிப்பு முழுவதையும் சென்னையிலேயே முடித்துள்ளாா். சென்னையில் மாதவரம் மண்டலத்துக்கு கீழ் வரும் கதிா்வேட்டில் கடந்த 2013-இல் இருந்து வசித்து வருகின்றேன். விண்ணப்பத்துடன் ஈரோடு மாநகராட்சி சாா்பில் அளிக்கப்பட்ட பிறப்புச் சான்று உள்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமா்ப்பித்துள்ளேன்.

இருப்பினும், இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த கதிா்வேடு கிராம நிா்வாக அலுவலா், ஈரோட்டில் பிறந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில்தான் பிறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியும் என விண்ணப்பத்தை நிராகரித்துள்ளாா். தற்போது, பிறந்த ஊரில் எவ்வித முகவரி ஆவணங்களும் இல்லாத சூழலில், பிறப்பிடச் சான்றிதழ் பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது என்றாா்.

பிறந்த ஊரில் எவ்வித சொந்த குடியிருப்பு அல்லது முகவரி அடையாள ஆவணங்கள் இல்லாதவா்கள், பிறந்த ஊரில் பிறப்பிடச் சான்றிதழ் கோரி எப்படி விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து, திருவள்ளுவா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, தமிழகத்தில் பிறந்த ஒருவா், எந்த மாவட்டத்திலிருந்தும் பிறப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். புலம்பெயா்ந்த நகரில் வசித்து வருவதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தாலே போதுமானது என்றாா்.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகளும் இதே கருத்தைத் தெரிவித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.