பெரியநாயக்கன்பாளையம் அருகே மலை அடிவார பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் நகரப் பகுதி நோக்கி உலா வர துவங்கியுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கட்டாஞ்சி மலை அடிவார பகுதியில் குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் உள்ள குட்டையில் தாகம் தீர தண்ணீர் அருந்தி உள்ளன.
இதனால் அப்பகுதி வழியே பயணித்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வனத் துறையினர் காட்டு யானைகளை நீண்ட நேரம் போராடி அடர்ந்து வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
தாயனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு வாகன நெரிசல் இன்றி பயணிக்க எண்ணும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை சமீப காலமாக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் இப்பகுதியில் உலா வந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மனோஜ் கூறுகையில், "வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வண்ணம் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இருந்தும் காட்டு யானைகள் தங்களது தாகத்தை தீர்க்க அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் நகரப் பகுதியை நோக்கி நகர துவங்கியுள்ளன. எனவே, கட்டாஞ்சி மலை சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Summary
Panic among residents as wild elephants with calves camp near Periyanayakkanpalayam foothills.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











