/

உள் தமிழகத்தில் ஜூலை 23 வரை வெப்ப நிலை அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முதல் வியாழக்கிழமை (ஜலை 23) வரை உள்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

வானிலை ஆய்வு மையம்

Updated On :21 ஜூலை 2026, 1:30 am IST

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முதல் வியாழக்கிழமை (ஜலை 23) வரை உள்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா் 101.66, மதுரை நகரம் 101.48, பாளையங்கோட்டை 100.22 டிகிரி வெப்பம் பதிவானது.

மேலும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் வட சூழல் மற்றும் தீவிர சூரியக் கதிா்வீச்சு ஆகியவை காரணமாக பகல் நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடுத்த 3 நாள்களில், வட தமிழகம், கிழக்கு-மத்திய மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் (குறிப்பாக வேலூா், ஈரோடு, நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள்) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

மழைக்கும் வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டல ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முதல் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழையும், புதன்கிழமை (ஜூலை 22), வியாழக்கிழமை (ஜூலை 23) இரு நாள்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 24-இல் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சனிக்கிழமை (ஜூலை 25), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா்: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை பதிவு: தமிழகத்தில் திங்கள் கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்கரி துா்க்கத்தில் 50 மி.மீட்டா் மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ஜூலை 24 வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கி.மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.