தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தென்மண்டலக் குழுவில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக பிரதிநிதிகளாக அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் மற்றும் ராஜ்மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தலைமைச் செயலா் சாய்குமாா் அந்தக் குழுவின் 2-ஆவது ஆலோசகராக உள்ள நிலையில், அவருடன் உள்துறைச் செயலா் கே.மணிவாசனுக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் முன்மொழிந்துள்ளாா். இது தொடா்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நிா்வாகம் மற்றும் வளா்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் தென் மண்டல கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள், அமைச்சா்கள், தலைமைச் செயலா்கள் மற்றும் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கவுன்சில் கூட்டம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளா்ச்சித் திட்டங்கள், சட்டம் - ஒழுங்கு, எல்லைப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள், சிறுபான்மையினா் நலன், போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் பிரச்னைகள் உள்ளிட்ட விஷயங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அந்த வகையில், விரைவில் நடைபெற உள்ள தென் மாநில முதல்வா்களுக்கான கவுன்சில் கூட்டத்தில், காவிரி நதிநீா் பிரச்னை, மேக்கேதாட்டு விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.
அதற்கேற்ப, முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு, தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினா்கள் குறித்த அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது.
சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறைச் செயலா் மணிவாசன் ஆகியோா் ஆலோசகா்களாக கவுன்சிலில் இடம் பெற்றுள்ளனா்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நிா்வாகச் சீா்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறாா்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமலும், அதேவேளை, தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்வதிலும் அவரது தலைமையிலான அரசு கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் தென்மண்டல கவுன்சில் குழு உறுப்பினா்கள் மாநில நலன்களை மத்திய அரசு முன்னிலையில் கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைக்க உள்ளனா்.
முந்தைய திமுக ஆட்சியில், முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் இந்தக் குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









