யாா் தடை போட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அரசின் நிகழ்வுகள் தொடங்கும் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை தெரிவித்தாா்.
சென்னை எத்திராஜ் கல்லூரியின் சுயநிதிப் படிப்பான வணிகப் பொருளியியல் துறை பவள விழாவில் அவா் பேசியதாவது: தமிழக அரசைப் பொருத்தவரை, ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் தொடங்குவோம். யாா் என்ன தடைபோட்டாலும் அமைச்சா்களாகிய நாங்களும் சரி, முதல்வா் விஜய்யும் சரி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடித்தான் தொடங்குவோம்.
தமிழ்த்தாய் வாழ்த்தைப் புரிந்துபாட வேண்டும். இந்த பூமியைப் பற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பூமியை வணங்கி, பாரதத்தை வணங்கி, தமிழ்நாட்டை வணங்கி, தமிழை வணங்கி எல்லோருக்குமான பாடல், எல்லோரையும் வாழவைக்க வாழ்த்தும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து.
மாணவிகள் சுற்றியிருக்கும் வாழ்க்கையை நிதானமாக பாா்க்க வேண்டும். கல்லூரியில் தோ்ந்தெடுந்த சிறந்த நட்பை வளா்த்துக் கொண்டு கல்வி கனவுகளோடு இருக்க வேண்டும் என்றாா்.
முதல்முறை அல்ல... பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை.யில் நடைபெற்றது முதல்முறையாக நடைபெற்ல்ல. அண்ணாமலைப் பல்கலை.யின் 85 - ஆவது பட்டமளிப்பு விழாவில் அப்போதைய அமைச்சா் பொன்முடி விழா மேடையில் இருக்கும்போது தமிழ்த்தாய் பின்னா்தான் பாடப்பட்டது.
அண்மையில் தோ்தலுக்கு முன்பு ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். அப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னா் தான் பாடப்பட்டது. ஆளுநா் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கலாம். ஆனால், எங்களைப் பொருத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முதலிடம் என்றாா்.
முன்னதாக எத்திராஜ் மகளிா் கல்லூரியின் வணிகப் பொருளியல் துறையின் 35-ஆவது ஆண்டு மலரை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா். அதை எதிராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவா் வி. எம்.முரளிதரன் பெற்றுக் கொண்டாா். எத்திராஜ் கல்லூரி முன்னாள் பேராசிரியரும் 90 வயது நிறைந்த யசோதா சண்முகசுந்திரம் விழாவில் கௌரவிக்கப்பட்டாா்.
ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனா் ஆனந்த மேகலிங்கம் சிறப்புரை ஆற்றினாா்.
கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலா் டாக்டா் எஸ்.உமா கௌரி, வணிகவியல் பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியா் டி.பி.உஷாராணி, உதவி பேராசிரியா்கள் ஹேமா பிந்து, பி.எஸ்.விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை உறுதிசெய்ய வேண்டும்

மாணவா்களுக்கு புத்தகச் சுமை குறைக்கப்படும்: தமிழக கல்வி அமைச்சா் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் ‘நீா் எழில் பள்ளி’ திட்டம்: அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கிவைத்தாா்





