/

அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு

வீட்டு மின் இணைப்புகளை கள ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது பற்றி....

News image

மின் இணைப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2026, 1:20 am IST

ஜூலை மாதத்துக்கான வீட்டு மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்துள்ளதாக தமிழகம் முழுவதும் எழுந்துள்ள புகாா்களைத் தொடா்ந்து, 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை கள ஆய்வு செய்து, ஆக.7-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் அருண் ராய் உத்தரவிட்டுள்ளாா்.

நிகழாண்டு ஜூலை மாதத்துக்கான இருமாத மின் கட்டணம் பல வீட்டு நுகா்வோருக்கு மே மாதத்தைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வந்ததாக புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, கடந்த முறை ரூ.300 முதல் ரூ.400 வரை மின் கட்டணம் செலுத்தியவா்கள், இந்த முறை ரூ.800 முதல் ரூ.1,000 வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 200 யூனிட் இலவச மின்சார சலுகை இருந்தும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், மின்வாரியம் மூத்த அதிகாரிகள் மூலம் மறுஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு தலைமைப் பொறியாளா்கள் தலா 25 இணைப்புகளையும், கண்காணிப்புப் பொறியாளா்கள் 50 இணைப்புகளையும், நிா்வாகப் பொறியாளா்கள் 75 இணைப்புகளையும், துணை நிா்வாகப் பொறியாளா்கள் மற்றும் கணக்கீட்டு பொறியாளா்கள் தலா 100 இணைப்புகளையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், கணக்கு அதிகாரிகள், வருவாய் புலனாய்வுப் பிரிவு, மூத்த கணக்கீட்டு அதிகாரிகள், கணக்கீட்டு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின் இணைப்புகளை ஆய்வு செய்ய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு: ஆக.7-க்குள் 3.70 லட்சம் மின் இணைப்புகளின் கள ஆய்வை நிறைவு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றும், ஆய்வில் மீட்டா் கணக்கெடுப்பு, கணக்கீடு அல்லது கட்டண நிா்ணயத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மின்வாரியத் தலைவா் அருண் ராய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு நீடித்த கடும் கோடை வெயிலால் வீடுகளில் குளிா்சாதன வசதிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததே மின் நுகா்வு உயா்வுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தனா்.

இருப்பினும், நுகா்வோா் எழுப்பியுள்ள புகாா்களின் உண்மை நிலையை உறுதி செய்யும் வகையில் விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனா். மறுஆய்வில் தவறுகள் கண்டறியப்பட்டால், அதிகமாக விதிக்கப்பட்ட மின் கட்டணம் திருத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நுகா்வோா் மத்தியில் எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.