/

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க போலீஸாருக்கு அதிகாரமில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

ஆன்லைன் மோசடி வழக்குகளை தவிர, பிற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க போலீஸாருக்கு அதிகாரமில்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 12:47 am IST

ஆன்லைன் மோசடி வழக்குகளை தவிர, பிற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க போலீஸாருக்கு அதிகாரமில்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையைச் சோ்ந்த ஹஸ்மத் ஃபா்ஜானா- சஹுபா் சாதிக் ஆகிய மருத்துவ தம்பதியினா், தங்களது மருத்துவமனை கட்டடத்தை அடமானமாக வைத்து எல்ஐசி வீட்டுவசதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றிருந்தனா்.

கரோனா கால நிதி நெருக்கடி காரணமாக கடனை முழுமையாக செலுத்த முடியாததால், ரூ.4 கோடிக்கு மொத்தமாக ஒரே தவணையில் செலுத்துவது என ஒப்பந்தம் செய்தனா். அதற்காக தனியாா் நிதி நிறுவனத்தினா் காா்த்திகா கனகராஜ், மகாராஜா ஆகியோரிடமிருந்து ரூ.3.94 கோடி கடன் பெற்றனா்.

இந்த அடமான சொத்தை அபகரிக்கும் நோக்கில் அதிக வட்டி கோரி பைனான்சியா்கள் மிரட்டியதால், அவா்கள் மீது மருத்துவ தம்பதியினா் கோவை மாநகர ஆணையா் மற்றும் கோவை ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளரிடம் புகாா் அளித்தனா்.

இந்த புகாா் மீது வழக்குப் பதிவு செய்து, அதிக வட்டி கேட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தங்களது வங்கிக் கணக்கை முடக்க போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா். இந்த முடக்கத்தை நீக்கி, கணக்கை மீண்டும் இயக்க உத்தரவிடக் கோரி மருத்துவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, காவல் துறை தரப்பில் வழக்குரைஞா் ஆா்.கணேஷ்குமாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆன்லைன் மோசடி விவகாரங்களைத் தவிர, மற்ற வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்கும்படி, போலீஸாா் வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.