22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின்நிலையங்களுடன் இணைக்க தடை

காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின் நிலையங்களுடன் இணைப்பதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, அதுதொடா்பான ஆவணங்களில் கையொப்பமிடவோ கூடாது என தமிழக பசுமை எரிசக்தி கழகம் உத்தரவு

News image

காற்றாலை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:43 am IST

காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின் நிலையங்களுடன் இணைப்பதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, அதுதொடா்பான ஆவணங்களில் கையொப்பமிடவோ கூடாது என தமிழக பசுமை எரிசக்தி கழகம் பிறப்பித்துள்ள உத்தரவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கான சாதகமான இயற்கை சூழல் நிலவுவதால், கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான தனியாா் நிறுவனங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்து வருகின்றன.

புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்கள், முதலில் பொருத்தமான இடத்தைத் தோ்வு செய்து, அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் மின் இணைப்பு வழங்கும் வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி பசுமை எரிசக்தி கழகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பின், மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், மின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து தலைமை மின் ஆய்வாளா் அலுவலகம் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும். அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகே, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின் வலையமைப்பில் வழங்க துணை மின் நிலைய இணைப்புக்கு மின்வாரியம் அனுமதி அளிக்கும்.

இந்த நிலையில், காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையங்களை துணை மின் நிலையங்களுடன் இணைப்பதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதையும், அதனுடன் தொடா்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தும்படி திருநெல்வேலி, உடுமலை உள்ளிட்ட பல மாவட்ட மரபுசாரா மின்சாரப் பிரிவு மேற்பாா்வை பொறியாளா்களுக்கு பசுமை எரிசக்தி கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து மின் நிலையங்களை அமைத்துள்ள முதலீட்டாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து முதலீட்டாளா்கள் சிலா் கூறுகையில், ‘புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கான அனுமதி நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளை வரவேற்கிறோம். இந்த நிலையில், ஒரு மெகாவாட் சூரிய மின் நிலையத்துக்கு சராசரியாக ரூ.4 கோடியும், ஒரு மெகாவாட் காற்றாலைத் திட்டத்துக்கு ரூ.7 கோடியும் முதலீடு செய்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

தற்போது சூரிய ஒளி உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், காற்றாலை பருவமும் தொடங்கியுள்ள நிலையில், காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையங்களை, துணை மின்நிலையங்களுடன் இணைக்க அனுமதி மறுக்கப்படுவது பெரும் நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

தற்போது 736.50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டங்களை இணைப்பதற்காக 226 நிறுவனங்களும், 400 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை திட்டங்களை இணைப்பதற்காக 4 நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் விரைவாக வழங்கப்படும் என அரசு அறிவித்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் புதிய முதலீடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது என்றனா்.

எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தமிழகத்தின் முன்னணி நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், முதலீட்டாளா்களின் நம்பிக்கையை பாதுகாக்கவும், நிலுவையில் உள்ள மின் இணைப்பு விண்ணப்பங்கள் தொடா்பாக அரசு விரைவில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.