தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, "சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 152 இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாற்ற வேண்டும் என மே 29-ல் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது.
2025 ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தேர்வு கமிட்டி இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றபோது திமுக அரசின் தரப்பின் வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்புக்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்த மாணவி மேற்கோள் காட்டிடும் என். கார்த்திகேயன் vs தமிழக அரசு என்ற தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்பதையும், அகில இந்திய இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை, என்பதையும் மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு மத்திய அரசு குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைக்கக் கூடாது என்ற தகவலையும் முறைப்படி எடுத்து வைக்கவில்லை என்று தெரிய வருகிறது.
அது மட்டுமின்றி, மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதை பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து அகில இந்திய தகுதிப் பட்டியல் மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால் , அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம் என ஒப்புக்கொண்ட காரணத்தால், நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
கருணாநிதி, முதல்வராக இருந்தபோது, கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-ல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது.
அந்த இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஆகவே முதல்வராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Summary
DMK Leader Udhayanidhi Urges Prevention of Surrendering Super-Specialty Medical Seats to All-India Quota
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி! - அன்புமணி

‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீசாலும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி ஸ்டாலின்

பயிர்க்கடன் தள்ளுபடி; நிறைய ஏமாற்றங்களுக்கு தயாராகணுமா சிஎம் சார்? - உதயநிதி ஸ்டாலின்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



