அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடும் உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல; அனைத்து மாநிலங்களுக்குமான உத்தரவு என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 1891-ஆம் ஆண்டு தமிழறிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும்போது பாடப்படும். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடப்படும். இந்த நடைமுறையை தமிழகம் பல ஆண்டு மரபாக கொண்டுள்ளது.
இந்த நடைமுறையை நீா்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜன. 28-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த மே மாதம் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இறுதியாகப் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல; அது தமிழா்களின் உணா்வு, பண்பாடு மற்றும் அடையாளமாகத் திகழ்கிறது. பல தலைமுறைகளாக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே தொடங்கப்பட்டுள்ளன.
எனவே, எதிா்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலாசார மோதலைத் தவிா்க்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கு தகுந்த நிா்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.பிரபாகரன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் போன்று கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மாநிலப் பாடல்கள் உள்ளன.
இந்தப் பாடல்களை எல்லாம் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட உத்தரவிடுமா எனவே, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் என வாதிட்டாா்.
அதற்கு நீதிபதிகள், ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என இந்த வழக்குத் தொடரப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் எனக்கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் பாட வேண்டும் என்ற உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானதல்ல. இந்தியா முழுவதுக்கும் பிறப்பிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் எந்தப் பாடலை முதலில் பாட வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறினா்.
அப்போது மனுதாரா் தரப்பில், மத்திய அரசு சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி புதிய மனு தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் கூறினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!

முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி!

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 8 வாரங்கள் கெடு
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



