தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலோர கா்நாடக பகுதிகளில் இருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முதல் ஜூன் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 10) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 11) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை ஒரு சில இடங்களில் சற்று அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கடலூா், பரங்கிப்பேட்டை- 102.94, வேலூா்-102.74, நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், திருத்தணி, தொண்டி-102.2, புதுச்சேரி-101.84, காரைக்கால், தஞ்சை-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை (ஜூன் 10) வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 110 மி.மீ. மழை பெய்துள்ளது. நாலுமுக்கு (திருநெல்வேலி)-100 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி)-90 மி.மீ., உபாசி (கோவை), மாஞ்சோலை (திருநெல்வேலி)- 80 மி.மீ, சின்னக்கல்லாறு, வால்பாறை, சின்கோனா (கோவை), சிற்றாறு- 1 (கன்னியாகுமரி)-60 மி.மீ., பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை)-50 மி.மீ., பெருஞ்சாணி அணை, பாலமோா், கொட்டாரம், களியல், புத்தன் அணை, திற்பரப்பு, சிவலோகம் (சிற்றாறு 2), அடையமடை (கன்னியாகுமரி, குண்டாறு அணை, அடவிநயினாா் (தென்காசி, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி)-40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



