2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலுக்கு எதிரான வழக்கு காலம் கடந்துவிட்டதாலும், பதவிக் காலம் முடிந்துவிட்டதாலும், உச்சநீதிமன்றம் முடித்துவைத்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என அந்த மனுவில் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தேர்தலில் தோல்வியடைந்த திமுகவை சேர்ந்த அப்பாவு அதே ஆண்டு தேர்தல் வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் வாக்கு எண்ணிக்கையின்போது தவறாக நிராகரிக்கப்பட்டதாகவும், இறுதிச் சுற்றுகளின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டி அப்பாவு உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். 19, 20 மற்றும் 21-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று அவர் கோரினார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, அப்பாவு முன்னிலையில் இருந்ததாகக் கூறப்பட்டாலும், இறுதி அறிவிப்பில் அவர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகக் காட்டப்பட்டது என்று குறிப்பிட்டது. விரிவான விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கண்டறிந்த உயர்நீதிமன்றம், அக்டோபர் 2019-இல் தபால் வாக்குகள் மற்றும் குறிப்பிட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்பதுரை உயர்நீதிமன்றத்தின் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வாக்கு மறுஎண்ணிக்கை செயல்முறையைத் தொடர 2019, அக்டோபர் 4-இல் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டாலும் குறிப்பிடப்பட்ட வாக்குகள் மறுஎண்ணிக்கை அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய தபால் வாக்குகளில் 153 வாக்குகள் அப்பாவுக்கும், ஒரே ஒரு வாக்கு மட்டுமே இன்பதுரைக்கும் ஆதரவாக அளிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு, இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இறுதியாக, 2026, மே 21இல் உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. காலம் கடந்துவிட்டதாலும், பதவிக் காலம் முடிந்துவிட்டதாலும் அந்த மேல்முறையீட்டில் உள்ள சட்டப் பிரச்னையைத் தீர்மானிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இவ்வழக்கில் மேற்கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க உயர்நீதிமன்றத்தையும் அனுமதித்தது. இதையடுத்து, அப்பாவு தொடர்ந்த தேர்தல் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரையின் வெற்றியை செல்லாது என அறிவித்ததுடன், 2016-2021 காலத்துக்கான முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினராக அப்பாவுவை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அந்தக் காலகட்டத்துக்கான தொகுதி பிரதிநிதியாக அப்பாவு பெயரை அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்களிலும் மாற்றிப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடையது

2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் இன்பதுரையின் வெற்றி செல்லாது! -உயா்நீதிமன்றம் தீா்ப்பு

2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



