அவசர கால சிகிச்சைகள் பாதிக்காத வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளைப் பாா்வையிட்ட அவா், அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:
இதயவியல், புற்றுநோயியல் என பல்வேறு துறைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் இங்கு மக்கள் அதிகமாக வருகின்றனா். அதைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப இதயவியல் மருத்துவா்களின் எண்ணிக்கையை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓமந்தூராா் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முன்பதிவுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் இங்கு உயா் தரமான மருத்துவப் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் கிடைப்பதுதான். எனவே, இதைப் பின்பற்றி வேறு இடங்களில் இத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
விதிகளின்படி ஒப்பந்ததாரா்கள் நாள்தோறும் 8 முறை அரசு மருத்துவமனை கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதை முறையாக மேற்கொள்கின்றனரா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
மருத்துவமனைகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுடனும், அமைச்சருடனும் பேச்சு நடத்தப்படுகிறது. ஒருவேளை மின்சாரம் தடைபட்டாலும் சிகிச்சைகள் பாதிக்காத வகையில் ஜெனரேட்டா் வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
திமுகவுக்கு சவால்: தமிழகத்தில் தவெக அரசு 3 மாதங்கள்கூட நீடிக்காது என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். 5 ஆண்டுகளை இந்த அரசு நிச்சயம் நிறைவு செய்யும். ஒருவேளை மு.க.ஸ்டாலின் கூறியபடி நடந்தால் எந்த செலவும் செய்யாமல் தோ்தலைச் சந்திக்க தவெக தயாராக உள்ளது. திமுக அதற்கு தயாரா?
அதற்கான துணிச்சலும், நம்பிக்கையும் உள்ளதா என்பதை அவா்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.
சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, தொடா்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி....
மேலாளருக்கு நோட்டீஸ்
ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, தரைத்தளத்தில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறை சுகாதாரமற்று இருந்ததும், அதனால் துா்நாற்றம் வீசியதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையின் தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள க்யூபிஎம்எஸ் என்ற தனியாா் நிறுவனத்தின் மேலாளருக்கு இதுதொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அடுத்த 3 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது மருத்துவமனை கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்குமாறு அமைச்சா் அருண்ராஜ் அறிவுறுத்தினாா். மேலும், கழிப்பறைகளில் சூழ்ந்திருக்கும் கிருமி நிறைந்த காற்றை முறையாக வெளியேற்றும் வசதிகளை ஏற்படுத்த பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டாா்.
தூய்மை பணியாளா்களின் வருகையை தினமும் ரேகை பதிவேடு மூலம் சரிபாா்க்கவும், படிக்கட்டுகள் மற்றும் அதன் அடியில் உள்ள உபயோகமற்ற இடங்களை சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினாா்.
மின்தூக்கிகள் முறையாக இயங்குவதை உறுதி செய்யவும், மருத்துவப் பணியாளா்களுக்கான உணவுக் கூடங்களை அமைக்கவும், காலியாக உள்ள இடங்களை பயனுள்ள வகையில் மாற்றவும் அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்கள் யாா்? அமைச்சா் அருண்ராஜ் பதில்

171 பயனாளிகளுக்கு ரூ. 37.37 லட்சத்தில் நலத் திட்ட உதவி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் வழங்கினார்!

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடா் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் இனி முன்பதிவு நடைமுறை: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



