இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 10, 11 தேதிகளில், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கோவையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), வை.செல்வராஜ் (நாகை) சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்பட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்கால அரசியல் நிகழ்ச்சி போக்குகள் குறித்தும், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கை பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களிடமிருந்து கூடுதல் வாக்குகளும், கூடுதல் இடங்களும் பெற்று த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் அதனை ஆட்சியமைக்க மரபுப்படி அழைப்பு தந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் அரசியல் கருவியாக, குடியரசுத் தலைவர் ஆட்சி எனும் பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சியைக் கொண்டுவர முயன்றார். மேலும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஜனநாயக நெறிமுறைகளை மீறி மாற்றாட்சியை உருவாக்க வேறு சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இவை இரண்டையும் நிராகரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், அவற்றைத் தடுக்க த.வெ.க. ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதென முடிவு செய்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த முடிவை எடுக்க, யாரிடமும் வழிகாட்டுதலோ, அனுமதியோ பெற வேண்டிய அவசியமும் இல்லை; அவ்வாறு ஏதும் நிகழவும் இல்லை.
உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், அதனை மறுத்து முன்னெடுக்கப்படும் கார்ப்பரேட் தாக்குதல்களை எதிர்ப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களை மதரீதியாகப் பிளவு படுத்தி மோத வைக்கும் வகுப்புவாத பாசிச சக்திகளை முறியடிப்பதும், சமூகநீதியை நிலை நிறுத்துவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கை நிலையாகும்.
இவற்றை நிபந்தனையாகக் கொண்டு, த.வெ.க. அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. அமைச்சரவையில் பங்கேற்க மறுத்துவிட்டது.
முதல்வர் ஜோசப் விஜய், “சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதாகவும், சென்ற அரசின் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்போவதாகவும்” மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அதனையும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதோடு, த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களையும் புதிய அரசு நிறைவேற்றும் என நம்புகிறது. அதே நேரத்தில் தனது அரசியல் நிலைக்கு மாறான செயல்பாட்டில் அரசு ஈடுபடுமானால், பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.
அகில இந்திய அளவில் “இந்தியா” கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறி விட்ட சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, எந்தக் கூட்டணியிலும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை எழவில்லை.
இந்திய அரசியல் சாசனம் வடிமைத்துத் தந்துள்ள கூட்டாட்சி முறைமையையும் இந்தியாவின் பண்பாட்டுப் பன்முகத் தன்மையையும் சிதைக்கிற நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ்-பாஜக மத்திய அரசு, கூர்மையாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், புலனாய்வு, அமுலாக்கத் துறைகள் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களைத் தன்வயப்படுத்தியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய பாசிச சர்வாதிகார கொடுங்கோன்மைக்கு எதிராக, தமிழ்நாட்டில் இடதுசாரி ஒற்றுமையை வலிமையாகக் கட்டமைக்கவும், அனைத்து முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளோடும் இணைந்து போராடுவது எனவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், விவசாயிகள் பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய மாநில அரசை வலியுறுத்தியும் ஜுன் 29 மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் குழாய் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைகள் பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருகின்றன. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, விவசாய உற்பத்திச் செலவு உயர்வு மற்றும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை ஆகியவற்றிற்கு மத்திய அரசின் எரிபொருள் விலைக் கொள்கைகளே முக்கியக் காரணமாக உள்ளன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் குழாய் இயற்கை எரிவாயு விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். எரிபொருள்களின் மீதான கலால் வரி மற்றும் பிற வரிகளை கணிசமாகக் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு மானியத்தை முழுமையாக மீட்டெடுத்து விரிவுபடுத்த வேண்டும். எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்களை நீக்கிவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக நான்கு சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் சட்ட நெறி தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டத் தொகுப்புகளை தமிழ்நாட்டில் அமலாக்க முடியாது என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பாஜக மத்திய அரசு கடந்த டிசம்பர் 16, 2025 ரத்து செய்து, விபி கிராம்ஜி என்ற புதிய திட்டத்தை ஜூலை முதல் தேதியில் இருந்து அமலாக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டம் மாநில உரிமையை பறித்துக் கொள்வதுடன், திட்டச் செலவில் 40 சதவீதம் நிதிச் சுமையை மாநில அரசு ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் கிராம ஊராட்சி மற்றும் கிராமசபா உரிமைகளையும், ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் இருபது ஆண்டுகளாக பெற்றிருந்த சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறித்துக் கொண்டுள்ளது.
இந்த மக்கள் விரோத புதிய சட்டத்தை திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ள ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
த.வெ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்துள்ளவாறு, காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துவக்க வேண்டும்.
மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் ஜூன் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Summary
M. Veerapandian, the State Secretary of the Communist Party of India, has stated that the party is not part of any alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









