தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கு தனி விமானத்தில் புதன்கிழமை பகல் 12 மணியளவில் வந்தார்.
அதைத்தொடர்ந்து, தில்லி சாணக்கியா புரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவரை சம்பிரதாயப்படி தமிழக அரசின் தலைமைச் செயலர் மு.சாய்குமார், தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஆர். ஜெயா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நேற்றிரவு தங்கியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், இன்று காலை புறப்பட்டார்.
அவர் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து நீதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள உணவகத்தில் தீ விபத்து நேரிட்டு கரும்புகை வெளியேறியுள்ளது.
தமிழ்நாடு அரசு இல்லத்தில் கீழ்த்தளத்தில் அமைந்திருக்கும் உணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை உடனடியாக பணியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, அங்கிருந்து கரும்புகை வெளியேறியிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
Summary
A fire incident at the canteen of Tamil Nadu House in Delhi, where Chief Minister Vijay was staying, has caused a stir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









