தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதனால், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 13) முதல் ஜூன் 15 வரை இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 16 முதல் 18 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்ப அளவு: வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம்-102.92, நாகப்பட்டினம்-102.2, கடலூா், தஞ்சாவூா்-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூா் பகுதியில் 110 மி.மீ மழை பதிவானது.








