மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை கிட்டத்கட்ட கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகளை காப்பாற்ற டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிவமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் காவிரியில் தண்ணீர் திறக்கப் படவில்லை. இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் 2024 ஆம் ஆண்டைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பாசனப் பரப்பு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டில் மொத்தம் 6.31 லட்சம் ஏக்கர் என்ற உச்சத்தை எட்டியது.
நடப்பாண்டில் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு அணையின் மொத்தக் கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதிக்கும் குறைவாக 41.64 டி.எம்.சி மட்டுமே இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து அவற்றின்மொத்தக் கொள்ளளவில் 29% மட்டுமே தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து மொத்தமாக வினாடிக்கு 3,395 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மே மாத மத்தியில் அந்தமான் நிகோபார் தீவுகளிலும், ஜூன் 4 ஆம் தேதி கேரளத்திலும் பெய்யத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து முன்னேறாமல் முடங்கி விட்டது. அடுத்த இரு வாரங்களுக்கு தென் மேற்கு பருவமழை கேரளம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துக் கணக்கிட்டால் ஆகஸ்ட் மாத பின்பகுதிக்கு முன்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. அதனால், குறுவை சாகுபடியை கிட்டத்தட்ட கைவிட்டாக வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களின் சில பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். அதனால், காவிரி டெல்டாவில் குறைந்தது 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவிலாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. தடையற்ற மும்முனை மின்சாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படாத நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட வாய்ப்பில்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி போதிய அளவில் செய்யப்படாததால் மட்டும் ரூ.2,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி. லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்கள் இதனால் வேலை இழப்பார்கள். ஏற்கனவே உரவிலை உயர்வு, போதிய கொள்முதல் விலை கிடைக்காமை, பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம் போன்றவற்றால் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை பருவ சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டால், அவர்களுக்கு ஓரளவாவது வருவாய் கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் கடன் தொல்லையிலிருந்து ஓரளவு மீண்டு வர முடியும்.
இந்த நெருக்கடியான சூழலில் இருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்காக.......
1. காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் நிதி உதவி பெற்று விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
2. மாநில அரசு அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து இப்போதுள்ள சூழலில் விவசாயிகள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாமா? என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
3. பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, ரூ.5000 இடுபொருள் மானியத்துடன் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
4. இவை அனைத்துக்கும் மேலாக குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய தடையற்ற மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் வாயிலாக காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்தபட்ச அளவிலாவது குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
Farmers have been pushed to the brink of abandoning Kuruvai cultivation because water has not been released from the Mettur Dam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு

ஆகஸ்ட் இறுதியில்தான் மேட்டூர் அணை திறப்பு?







