கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்துள்ளார்.
விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த சி. விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.
எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன்.
ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான தொண்டர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.
நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து.
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும்..
என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.. தொடர்வேன்! என்று சி. விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Former Minister C. Vijayabaskar announced on Tuesday (June 16) that he is quitting the AIADMK with a heavy heart.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









