தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
கடந்த மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்பு விழாவின்போது பேசுகையில், “தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. திமுக ஆட்சிக்காலத்தில் கஜானா காலியாகிவிட்டது. எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும். தமிழ்நாடு அரசு ரூ. 10 லட்சம் கோடி கடனில் தவித்து வருகிறது.
தவெக அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதி நிலை என்ன? என்பது குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை வெளியிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று மாலை 5.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், அரசுக்குக் கிடைத்த வருவாய், செலவீனங்கள், எந்ததெந்தத் துறைகளுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் மொத்த கடன் எவ்வளவு, அந்தக் கடன்களுக்கு எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்களும் அந்த அறிக்கையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனெவே, தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி, ரூ. 50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி (தற்போது ரூ. 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது), சிங்கப்பெண் அதிரடிப்படை, 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல, காலை உணவுத்திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு வருகிற செப்.17 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நிலையில், வெள்ளை அறிக்கையின் நிதி நிலையின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளான மகளிருக்கு ரூ. 2,500, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ. 3,000, மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற ஜூன் 18 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அந்தக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, தவெகவின் வாக்குறுதிகளுக்கான செலவீனங்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களும் வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. தமிழகத்தின் நிதி நிலையைப் பொறுத்து தவெகவின் திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Official information has been released stating that the white paper on Tamil Nadu's financial status will be released this evening.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

கேரளம்: மாநிலத்தின் வருவாயில் 77% ஓய்வூதியம், வட்டிக்கு மட்டுமே செலவிடப்படுகிறதாம்...







