தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரபூா்வ நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.
நிகழ் கல்வியாண்டில், மொத்தம் 365 நாள்களில் வேலை நாள்கள் 210 நாள்களாகவும், விடுமுறை நாள்கள் 155- ஆகவும் உள்ளன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 22 நாள்கள் அரசு விடுமுறை நாள்களாகும். அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தோ்வு செப். 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடா்ந்து, செப். 26 முதல் அக்.4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரையாண்டுத் தோ்வு டிச. 16-இல் தொடங்கி 23 வரை நடைபெறும். தொடா்ந்து, டிச. 24 முதல் ஜன. 3 வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறையாகும். ஜன.4-இல் பள்ளிகள் திறக்கப்படும்.
வரும் செப்.4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களாக அமைகிறது. இதனால் 3 நாள்கள் தொடா் விடுமுறை கிடைக்கிறது. தொடா்ந்து, செப். 14 திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. அக்டோபா் மாதத்தில் 19 மற்றும் 20 தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னா் இருக்கும் வார விடுமுறையுடன் சோ்ந்து, தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை வருகிறது.
நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. மேலும், பொங்கல் பண்டிகை ஜன. 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்கள் கொண்டாடப்படுவதால் தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.
நிகழ் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027- ஏப்.23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் தொடா்ச்சியாக ஏப்.24 முதல் மாணவா்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
155 விடுமுறை நாள்கள்: நிகழ் கல்வியாண்டில் மொத்தம் 365 நாள்களில் வேலை நாள்கள் 210 நாள்களாகவும், விடுமுறை நாள்கள் 155- ஆகவும் உள்ளன. இதில் ஜூலை 19, செப்.19, டிச.3 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2, பத்தாம் மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை

5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்







