விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பிறகு கட்சியின் வளர்ச்சி குறித்து திருமாவளவன் பேசியதாவது:
''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது. இதை ஆணவத்தோடு சொல்லவில்லை. அகந்தையோடு சொல்லவில்லை. கள அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.
நாம் இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு வளர்ந்திருக்கிறோம். நமது வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை தனித்துப் போட்டியிட்டு நாம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நாம் தவிர்க்க முடியாத சக்தி.
பாமக தங்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபித்த பிறகுதான் கூட்டணியில் சேரமுடிந்தது. தேமுதிக தனது வாக்கு வங்கியை நிரூபித்த பிறகுதான் அதிமுகவுடன் கூட்டணி சேர முடிந்தது.
நாம் தமிழர் கட்சி கூட எந்த கூட்டணியிலும் இடம்பெறாவிட்டாலும் தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், வாக்கு சதவீதத்தை உறுதிப்படுத்தாமல் கூட்டணியில் இருக்கும் கட்சி விசிக மட்டும்தான்.
எங்களுக்கு இத்தனை இடங்களைக் கொடுங்கள், பதவியைக் கொடுங்கள் என்று பேரம் பேசவில்லை. ஆனால் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, தவெகவுக்கோ விசிக கட்டாயம் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவிகிதமாக குறைந்தது. 8 சதவிகிதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 4 ஆக குறைந்துவிட்டது.
66 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 47 இடங்களுக்குச் சென்றுவிட்டது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்கள் என்ற அளவில் சுருங்கிப்போய்விட்டது.
இதையெல்லாம் விமர்சிக்காதவர்கள், 8 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்ற விசிக, பலவீனமாகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் அவதூறுகாளை கட்டமைக்கிறார்கள்.
திருமாவளவனை, விசிகவை ஒரு சக்தியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டதே, தனித்துப் போட்டியிடாமலேயே தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துவிட்டதே என்று நினைத்தவர்களுக்கு அந்த 2 இல்லாவிட்டால், இன்றைய ஆட்சியே இல்லை என்ற சூழல் உருவாகியிருக்கும். இதனை அகந்தையுடன் சொல்லவில்லை'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.
Summary
Tamil Nadu politics cannot function without the VCK! Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







