முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு சங்கீத சபாவில் பாரதி சேவா கேந்திரம் சார்பில் இன்று நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை நிறுத்தப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், தேர்தலுக்கு முன்பு விஜய் அளித்த பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
பேருந்தின் மீது ஏறி பாடல் பாடியதோடு பல்வேறு தகவல்களை கூறிய அவர் தற்போது முக்கிய பிரச்னைகள் குறித்து பேச மறுக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் பெண்களுக்கான உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை, இலவச பேருந்து திட்டம் நடைமுறைக்கு வரவில்லை, யாருக்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியாத நிலை இருப்பதாகவும், தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று கூறிய அரசு தற்போது கீழ்மட்டம் முதல் அமைச்சர்கள் வரை ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அவர், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதையே அமைச்சர்கள் ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். அரசுக்கு நிர்வாகத்தை சீரமைக்க கால அவகாசம் வழங்கலாம், ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு எந்த அவகாசமும் வழங்க முடியாது என்றும், மக்களின் குறைகளை யாரிடம் கூற வேண்டும் என்பதே தெரியாத நிலை உருவாகியுள்ளதாகவும், முதல்வருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
தமிழகத்தில் தற்போது மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் அரசியல் மட்டுமே நடைபெறுவதாகவும் அவர் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணி அல்ல, “கூட்டுப்பிணி” தான் நடைபெறுகிறது என்றும், அக்கட்சியின் மிகப்பெரிய பவர் சென்டராக ஆதவ் அர்ஜுனா செயல்பட்டு வருகிறார் என்றும், அவர் கூறினால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட கையெழுத்திடும் நிலை இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விஜய்க்கு நிர்வாக அனுபவம் இல்லை என்றும், அவருக்குப் பிறகு கட்சியில் முக்கிய பதவிக்கு கூட ஆதவ் அர்ஜுனா வரக்கூடும் என்றும் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதன் கொள்கை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும், தி.மு.க. நீட்டுக்கு எதிராக இருப்பதை காரணம் காட்டியே அக்கட்சியும் எதிர்க்கிறது என்றும் விமர்சித்தார். சிலரின் தூண்டுதலால் நீட் தொடர்பாக மாணவர்களின் உயிரிழப்புகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேக்கேதாட்டு அணை திட்டம் தேவையில்லை என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும், காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பை பெற்றுத் தந்தது போலவே மேக்கேதாட்டு விவகாரத்திலும் மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமான நல்ல முடிவை வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Summary
BJP State President Nainar Nagendran has stated that Vijay has no administrative experience to become the Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஆளுங்கட்சியினருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: நயினார் நாகேந்திரன்

48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!









