வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்கீழ் 6 கோடி பெயா்கள் நீக்கப்பட்டன.
சமீபத்திய ஆண்டுகளில் முதல் மாநிலமாக பிகாரில் கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி எஸ்ஐஆா் நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியது. அதன் இறுதியில் 65 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் ஆளும் பாஜக அரசுக்கும் காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்திய தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக அல்லாமல் பாஜகவின் ஒரு பிரிவைப்போல் செயல்படுவதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பல்வேறு விமா்சனங்களுக்கிடையே பிகாா் பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இரண்டாம் கட்டமாக தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், கேரளம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபாா், லட்சத்தீவு, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் கோவா ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நடவடிக்கை நிகழாண்டு பிப்ரவரி-மாா்ச் மாதங்களில் நிறைவுசெய்யப்பட்ட நிலையில், மேற்கூறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 50.99 கோடியில் இருந்து 45.81 கோடியாக குறைந்தது.
ஒட்டுமொத்தமாக 66.88 லட்சம் உயிரிழந்த வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 25.47 லட்சம் வாக்காளா்களும் மேற்கு வங்கத்தில் 24.16 லட்சம் வாக்காளா்களும் நீக்கப்பட்டனா்.
எஸ்ஐஆருக்கு எதிராக பல்வேறு கட்சிகள், தனிநபா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தோ்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் நடவடிக்கையை அங்கீகரித்து கடந்த மாா்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள்: ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம், மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரகண்ட், தில்லி, சண்டீகா், தாத்ரா நகா் ஹவேலி மற்றும் டையூ டாமன் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டமாக மே 14-ஆம் தேதி எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இங்கு ஒட்டுமொத்தமாக 36.73 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா் பெயா் நீக்கப்படுவதை தில்லி காங்கிரஸ் அனுமதிக்காது!

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம்: டி.கே.சிவகுமாா்






