சென்னை: அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த விடியா திமுக ஆட்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழிக்கான தேர்வு தவிர, 150 மதிப்பெண்களுக்கான பாடம் சார்ந்த புறநிலை வினாக்கள் பகுதி மற்றும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது.
உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வியாழக்கிழமை(ஜூன் 25) அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் '0' மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50-க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
"புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும்? மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடுகிறது" என்று தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
"பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, வேலை பெறுவதற்காக நாங்கள் இந்தத் தேர்வை எழுதினோம். ஆனால், இந்தத் தன்னிச்சையான மதிப்பீடு எங்கள் எதிர்காலத்தை ஒரு முச்சந்தியில் நிறுத்தியுள்ளது" என்று கட்டுரைத் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர். மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் வழங்கியதன் மூலம், ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வில் விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விளக்கத் தாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான மறுமதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், பொறுப்பு முதல்வரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும்; 50 சவீதத்திற்குமேல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு கல்லூரியின் கற்பித்தல் திறன் குறைந்து, மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி படையெடுப்பது அதிகமாகியுள்ளது.
இதன் காரணமாக, எனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டில், இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 51.4 சதவீதமாக உயர்ந்து முதலிடத்தில் இருந்தது, திமுக ஆட்சியின் குளறுபடிகளால் உயர் கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக சரிந்தது.
இந்த நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த தவெக அரசு, கல்லூரி மாணவர் சேர்க்கைகளுக்கு இன்றுவரை சரியான வழிமுறை வழங்காத காரணத்தினால், இந்தாண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டு 60 நாள்கள் கடந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 45 சதவீத இடங்கள் காலியாக உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வருங்கால மாணவச் செல்வங்களுக்கு பாடம் கற்பித்து வழிகாட்டியாக இருக்கக்கூடிய உதவிப் பேராசிரியர்கள் தேர்வில், இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றால், கற்றல், கற்பித்தல் முறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அரசு கல்லூரிகளில் சேர்ந்து அதிக அளவு பயனடையும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரின் எதிர்காலமும், நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாக மாறிவிடும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. என்ற குறளை நினைவுபடுத்துவதுடன், தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டுமென்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Summary
A proper inquiry is needed regarding irregularities in the Assistant Professor recruitment process says Edappadi Palaniswami...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவிப் பேராசிரியர் பணி நியமியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா... முறைகேடா? - அன்புமணி

உயர்கல்வி தேர்வு! மதிப்பெண் மட்டுமே முக்கியமல்ல!







