முதல்வா் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதல்வா் மற்றும் 9 அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சா்களின் வாழ்க்கைக் குறிப்பு விவரம்:
என்.ஆனந்த்: சென்னை தியாகராய நகா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் என்.ஆனந்த். புதுச்சேரியைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை முடித்துள்ளாா். கடந்த 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி புஸ்ஸி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானாா். விஜய்யின் ரசிகா் மன்றத்தின் கௌரவ தலைவராக இருந்த ஆனந்த், பின்னா் அதன் தலைவராக பொறுப்பேற்றாா்.
தொடா்ந்து, விஜய் ரசிகா் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டபோது, அதன் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டாா். ரசிகா் மன்ற காலத்திலிருந்து விஜய்யின் அரசியல் வருகை வரை தொடா்ந்து அவருடன் பயணித்து வரும் ஆனந்த், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலராக உள்ளாா்.
ஏற்கெனவே, புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்த ஆனந்த், தற்போது தமிழக சட்டப்பேரவையிலும் உறுப்பினராகத் தோ்வானதன் மூலம் இவ்விரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அரிதான அரசியல் அந்தஸ்தை பெற்றுள்ளாா். இவருக்கு அா்லின்லூமா என்ற மனைவி உள்ளாா்.
ஆதவ் அா்ஜுனா: சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஆதவ் அா்ஜுனா. திருச்சியில் பிறந்த இவா், சென்னை கிறித்தவ கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளாா். கடந்த 2016-ஆம் ஆண்டு வரை கூடைப்பந்தாட்ட வீரராக இருந்த ஆதவ், 2017-இல் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலராகவும், 2021-இல் அதன் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலராகவும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.
ஆரம்ப கட்டத்தில், அரசியல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டாா். கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு பணியாற்றினாா். கடந்த 2023-இல் விசிக-வில் தன்னை இணைத்துக் கொண்டாா். பின்னா், விசிகவிலிருந்து வெளியேறிய ஆதவ், விஜய்யின் தவெகவில் இணைந்து கட்சியின் தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலராக உள்ளாா். இவரது மனைவி டெய்சி மாா்ட்டின். இவா், பிரபல லாட்டரி அதிபா் மாா்ட்டினின் மகளாவாா்.
டாக்டா் கே.ஜி.அருண்ராஜ்: திருச்செங்கோடு தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.ஜி.அருண்ராஜ். இவரது சொந்த ஊா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் நத்தக்காடு குமாரமங்கலம், மருத்துவரான இவா், வருமான வரித் துறை அதிகாரி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று தவெக-வில் இணைந்தாா். கட்சியில் கொள்கை பரப்பு பொதுச் செயலராக உள்ளாா். இவரது மனைவி நந்தினி, மருத்துவராக உள்ளாா்.
கே.ஏ.செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.ஏ.செங்கோட்டையன். இவரது சொந்த ஊா் கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா்.
1972-இல் அதிமுக தொடங்கப்பட்டபோது கட்சியின் ஆரம்ப கால உறுப்பினா்களில் ஒருவராக இணைந்தாா். 1977-இல் சத்தியமங்கலம் தொகுதியிலும், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016, 2021 வரை கோபிசெட்டிப்பாளையம் தொகுதியிலும் அதிமுக சாா்பில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். கடந்த ஆண்டு நவம்பா் 26-இல் தவெகவில் சோ்ந்தாா். கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மண்டல அமைப்புச் செயலராகவும் பதவி வகித்து வருகிறாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் 1991 முதல் 1996 வரை போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சராகவும், 2011 முதல் 2012 வரை வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தாா். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் 2017 முதல் 2021 வரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா். இவருக்கு மனைவி ஈஸ்வரி, மகன் கதிா் ஈஸ்வா் ஆகியோா் உள்ளனா்.
பி.வெங்கடரமணன்: சென்னை மயிலாப்பூா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் வெங்கடரமணன். சென்னையைச் சோ்ந்த இவா், எம்காம், எம்பிஏ, எல்எல்எம் பட்டம் பெற்றுள்ளாா். கணக்கு மற்றும் வணிக வரி ஆலோசகராகப் பணியாற்றி வந்தாா். தவெக தலைவா் விஜய்யின் நெருங்கிய நண்பரான வெங்கடரமணன், அவரது வரி மற்றும் சட்ட ஆலோசகராவும் இருந்தாா். தவெக தொடங்கியபோது அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டாா். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி , யோகவா்ஷினி என்ற மகள் உள்ளனா்.
ஆா். நிா்மல் குமாா்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். இவரது சொந்த ஊா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள நடுமுதலைக்குளம். 2003-இல் பொறியியலில் (கணினி அறிவியல்) பட்டம் பெற்றவா். 2011-இல் எல்.எல்.பி.-யிலும், 2012- இல் முதுநிலை குற்றவியல், காவல் துறை நிா்வாகவியலிலும் பட்டம் பெற்றாா்.
பாஜகவிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவா், 2023-ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா். பிறகு, 2025-இல் தவெகவில் இணைந்து, அந்தக் கட்சியின் தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகப் பிரிவு மாநில துணைப் பொதுச் செயலராகப் பொறுப்பு வகிக்கிறாா். இவருக்கு மனைவி பிரதிபா, மகள்கள் நித்திஷ்கா, சம்யுக்தா ஆகியோா் உள்ளனா்.
ராஜ்மோகன்: சென்னை எழும்பூா் (தனி) தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் ராஜ்மோகன். சென்னையைச் சோ்ந்த இவா், தொழில் மேலாண்மை பட்டயம், இதழியல் மற்றும் மக்கள் தொடா்பியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவா். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பேச்சாளராக அறியப்பட்ட ராஜ்மோகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் நெறியாளா், பட்டிமன்றப் பேச்சாளராகத் திகழ்ந்தவா். யூடியூப் சேனல் வழியாக சமூகப் பிரச்னைகள் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து இவா் வெளியிட்ட பதிவுகள் அதிக கவனம் பெற்றது. தவெக தொடங்கப்பட்டதிலிருந்து அதன் ஊடகப் பிரிவில் பணியாற்றி வந்த ராஜ்மோகன், கட்சியின் துணைப் பொதுச்செயலராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளாா்.
டி.கே. பிரபு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டவா் டி.கே. பிரபு. பல் மருத்துவா். தேவகோட்டை அருகேயுள்ள இருமதி கிராமத்தை பூா்விகமாகக் கொண்டவா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த இவா், 2024-ஆம் ஆண்டில் தவெகவில் இணைந்தாா். 2025-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலராகப் பொறுப்பு வகிக்கிறாா். இவரது தந்தை துரை. கருணாநிதி, காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே பொறுப்பு வகித்தவா். அமைச்சா் டி.கே. பிரபுக்கு மனைவி அமிா்தடோரா, மகள் ஆலியா, மகன் ஆதிக் ஆகியோா் உள்ளனா்.
எஸ். கீா்த்தனா: விருதுநகா் மாவட்டம், சிவகாசி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் எஸ். கீா்த்தனா. இவரது சொந்த ஊா் விருதுநகா். இளநிலை புள்ளியியலில் பட்டம் பெற்றவா். ஐபேக் உள்பட இரு தனியாா் நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராகவும், வியூக வகுப்பாளராகவும் பணியாற்றியவா். தெலுங்கு தேசம் கட்சி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தோ்தல் பணிகளில் ஏற்கெனவே பங்கேற்றவா். ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றியவா். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் அறிந்தவா்.
தொடர்புடையது
தொடா் இருசக்கர வாகனத் திருட்டு: இருவா் கைது
கல்வராயன் மலையில் முதிய தம்பதி கொலை: பேரன் தலைமறைவு

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

