நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

உதகையில் மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்! மே 28 வரை நடைபெறும்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 128-ஆவது மலர்க் கண்காட்சி குறித்து...

News image

மலர்க் கண்காட்சிக்காக உதகை தாவரவியல் பூங்காவில் மாடத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள மலர்த் தொட்டிகள். - படம்: டிஎன்எஸ்

Updated On :41 நிமிடங்கள் முன்பு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர்க் கண்காட்சி நாளை (மே 18) தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி மே 28 வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாத கோடை சீசனின்போது மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியும், அதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, மலர்க் கண்காட்சி மட்டுமே நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 128-ஆவது மலர்க் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் திங்கள்கிழமை (மே 18) தொடங்கி வருகிற மே 28-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

இதற்காக தாவரவியல் பூங்காவில் 275 ரகங்களைச் சோ்ந்த 10 லட்சம் மலர் செடிகள் ஏற்கெனவே நடவு செய்யப்பட்டுள்ளன. அந்த செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் 50 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்த பல்வேறு ரக செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துள்ளன. பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் காட்சிக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் கண்ணாடி மாளிகையில் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பெரிய புல்வெளி திடலில் மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவர இத்தாலியன் கார்டன் பகுதியில் ஏற்கெனவே மலர்களால் அருவி அலங்காரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல கார்னேஷன் மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மற்றும் உருவங்களை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் பெருமையை விளக்கும் வகையில் அலங்காரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடிவமைப்பு உள்பட 30-க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதற்கான வேலையில் பூங்கா பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடக்க நாளை முன்னிட்டு மே 18 ஒருநாள் உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் போது, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், சர்க்கீயூட் பேருந்துகள் மற்றும் பார்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சர்க்கீயூட் பேருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சர்க்கீயூட் பேருந்துகள், பார்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் மலா் கண்காட்சி நடக்கும் 11 நாள்களும் இயக்கப்படவுள்ளன.

இது தவிர கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படவுள்ளன.

Summary

The 128th Flower Exhibition begins tomorrow (May 18) at the Government Botanical Garden in Udhagamandalam. This exhibition is scheduled to run for 11 days, until May 28.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.