பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி: தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

தமிழகத்தில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்ததற்கு சீமான் கண்டனம்

News image

முதல்வர் விஜய் | சீமான் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:01 pm IST

தமிழகத்தில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்ததற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?

புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.

தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும்.

அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்?

மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக் கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி?

வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம் உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Summary

Temporary Permission for Private Hospitals to Open: NTK Leader Seeman Condemns TVK Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.