சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா!

அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

Isakki Subbiah with Edappadi Palaniswami.

எடப்பாடி பழனிசாமியுடன் இசக்கி சுப்பையா. - (கோப்புப்படம்)

Published On :26 மே 2026, 1:37 pm IST

அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கட்சியான நிலையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சிவி சண்முகம் அணி என இரண்டாக உடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தனியே பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் நேற்று (மே 25) சந்தித்துப் பேசினர்.

அதன்பின்னர், எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்தனர்.

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வான இசக்கி சுப்பையாவும், சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

அவர், தட்டச்சு செய்த பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததைத் தொடர்ந்து அதனை ஏற்க மறுத்த அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் கேட்டுக்கொண்டதன் பேரில், ராஜிநாமா கடிதத்தை இசக்கி சுப்பையா கைப்பட எழுதி கொடுத்தார்.

யார் இந்த இசக்கி சுப்பையா?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இசக்கி சுப்பையா வெற்றி பெற்றிருந்தார்.

2011 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா, 2026 தேர்தலிலும் அ.தி.மு.க சார்பாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா, ஒரு மாதத்திலேயே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து நேற்று மூன்று எம்.எல்.ஏக்கள் பதவி விலகி, தவெகவில் இணைந்திருந்த நிலையில், இசக்கி சுப்பையாவும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 43 ஆகக் குறைந்துள்ளது.

Summary

Ambasamudram AIADMK MLA Isakki Subbiah has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.