தலைமைச் செயலகத்துக்கு கோட் - சூட்டில் வரும் முதல்வர் விஜய், முதல்முறையாகப் பட்டு வேட்டி, சட்டையில் வந்தது அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரான விஜய், கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவியிருந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர்த்த தவெக, நேரடியாக 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியையும் பிடித்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய், கட்சி தொடங்கியதிலிருந்தே ஆடைக்கென அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குறிப்பாக, தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், விக்ரவாண்டி, மதுரை மாநாடு என அனைத்து இடங்களிலும் வெள்ளை நிற சட்டை மற்றும் பெய்ஜ் நிற பேண்ட் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விஜய்யின் ஆடை நிறத்தைக் குறிக்கும் விதமாக, தேர்தல் வாக்குப் பதிவின்போதும் தவெகவின் ஆதரவாளர்கள், விஜய்யின் ரசிகர்கள் என பலரும் அதே வெள்ளை சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்க ஆளுநரிடம் உரிமைக் கோர சென்ற போது, தனது வழக்கத்தை மாற்றி வெள்ளை நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றிருந்தார்.
அதன்பின்னர், முதல்வர் பதவியேற்பு விழாவில் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டில் வந்திருந்த அவர் சற்று நேரத்திலேயே கருப்பு நிற கோட் சூட்டுக்கு மாறி அனைவருக்கும் ஆச்சரியமளித்திருந்தார். தில்லிக்கு நேற்று முன்தினம் பிரதமரை சந்திக்கும் போதும் கருப்பு கோட் சூட்டிலேயே சென்றிருந்தார்.
இந்த நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தலைமைச் செயலகத்துக்குப் பட்டு வேட்டி சட்டையில் வந்தார். எப்போதும் கருப்பு கோட் சூட்டில் வரும் முதல்வர் விஜய், இன்று (மே 29) பட்டு வேட்டி, சட்டையில் வந்ததை பார்த்து அரசு உயரதிகாரிகள் முதல் தலைமைச் செயலகப் பணியாளர்கள் என அனைவரும் வியந்தனர்.

சென்னை நீலாங்கரையில் தனது நெருங்கிய நண்பரும், மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் அங்கிருந்து அப்படியே தலைமைச் செயலகம் வந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்யின் நடவடிக்கைகள் உற்று நோக்கப்பட்டு வரும் வேளையில், பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 6-ல் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன் விஜய் கலந்து கொண்டிருந்தார். அப்போதும் அவர் பட்டு வேட்டி, சட்டையில் கலந்து கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Summary
Chief Minister Vijay who typically arrives at the Secretariat in a suit has garnered everyone's attention by appearing, for the first time, in a silk dhoti and shirt.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







