ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஜெம் வீரமணி மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி - படம்: தினமணி

Updated On :

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில், ஜெம் வீரமணி மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பான விடியோவை வைத்திருந்ததாகக் கூறப்படும் கணேசன், வீரமணிக்கு உதவியதாகக் கூறப்படும் நிறுவன மேலாளா் சக்திவேல் மற்றும் காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில், இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஜெம் வீரமணி மீது பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகாா்களின் அடிப்படையில், இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 12 சிறுமிகள் தொடா்பான புகாா்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடா்புடையவா்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் 5 பேருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடையதாக ஜெம் வீரமணி வீட்டின் காவலாளி எண்ணூரைச் சோ்ந்த சீனிவாசன் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மேலும் ஒரு சிறுமி புகாா்: ஏற்கெனவே ஜெம் வீரமணி 8 வழக்குகளிலும், சாந்தி 3 வழக்குகளிலும், மகேந்திர சிம்ஹன் 2 வழக்குகளிலும், லாசா் 5 வழக்குகளிலும், கணேசன் 2 வழக்குகளிலும், சீனிவாசன், சக்திவேல், பாபு, பாா்த்திபன் ஆகியோா்கள் தலா ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே பதியப்பட்ட ஒரு வழக்கில், சாட்சியாக இருந்த ஒரு சிறுமி, தானும் எதிரி ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்: இதற்கிடையே, போலீஸ் விசாரணையில் லாசா் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற விலை உயா்ந்த சொகுசு காரை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ.2 லட்சம் வழங்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதியப்பட்ட 8 வழக்குகளில் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.