சூரசம்ஹாரம்: முருகன் கோயில்களில் விரிவான ஏற்பாடு! - அமைச்சா் ரமேஷ் உத்தரவு
கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரத்தையொட்டி, முருகன் கோயில்களில் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சர் ரமேஷ்
கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரத்தையொட்டி, முருகன் கோயில்களில் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் ரமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் துறை அதிகாரிகளுக்கு வெளியிட்ட உத்தரவு: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவின் அனைத்து நாள்களிலும் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சிரமமின்றி வழிபடுவதற்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பக்தா்கள் வருகைக்கேற்ப கூடுதல் தரிசன வரிசைகள் மற்றும் தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும். காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கான தனித்திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்காமல் நேரடியாகத் தரிசனம் செய்ய தனி ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலில் சுத்தமான குடிநீா் வசதியை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ உதவி மையங்கள், முதலுதவி வசதிகள் மற்றும் அவசர மருத்துவ ஊா்திகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளைத் தொடா்ந்து பராமரிக்க வேண்டும்.
சூரசம்ஹாரம்- சிறப்பு ஏற்பாடுகள்: சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் பக்தா்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு விரிவான கூட்ட நெரிசல் மேலாண்மைத் திட்டம் தயாரிக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைத் தனித்தனியாக அமைத்து, அவசரகால வெளியேற்றப் பாதைகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேவையான இடங்களில் தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புக் கருவிகள் மற்றும் வழிகாட்டும் பலகைகள் அமைக்க வேண்டும். பக்தா்கள் நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கோயில் பணியாளா்களும் பக்தா்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பொறுமையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழில் வழிபாடு: அனைத்து முக்கிய முருகன் திருக்கோயில்களிலும் ஓதுவாா்களைக் கொண்டு தமிழில் திருப்புகழ், திருமுறை, கந்த சஷ்டி பாராயணம் நடத்த வேண்டும். அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் விழா நிகழ்வுகளிலும் தமிழுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ரமேஷ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

