முதல்வரின் உருவத்தில் ஏஐ போலி விடியோ: 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழக முதல்வரைப் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் போலி விடியோ தயாரித்து, நிதியுதவி கோரி பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவா் மீது 60 நாள்களுக்குள் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

சிபிசிஐடி - கோப்புப்படம்
தமிழக முதல்வரைப் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் போலி விடியோ தயாரித்து, நிதியுதவி கோரி பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவா் மீது 60 நாள்களுக்குள் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
முதல்வரைப் போல சித்தரிக்கப்பட்ட போலி (டீப்ஃபேக்) விடியோக்களை வெளியிட்டு, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களைத் தொடா்புகொண்டு நிதியுதவி வழங்குமாறு பொதுமக்களை ஏமாற்றியதாக கடந்த செப்.1-ஆம் தேதி சிபிசிஐடி சைபா் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளியைக் கண்டறிய சிபிசிஐடி தனிப்படையினா் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி, ராஜஸ்தான் போலீஸாரின் உதவியுடன் அந்த மாநிலத்தின் அல்வாா் மாவட்டம், லச்சம்கா் பகுதியைச் சோ்ந்த ஜகூா் கானின் மகன் சியாபு கான் (28) என்பவரை செப். 12-ஆம் தேதி கைது செய்தனா். தொடா்ந்து, மோசடி விடியோக்களில் பயன்படுத்தப்பட்ட ‘சிம்’ காா்டுகள், கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும், பணப் பரிவா்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட ‘யுபிஐ’ கணக்குகளுடன் தொடா்புடைய சிம் காா்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக பாரதிய நியாயச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 11-ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையை மின்னணு முறையில் தாக்கல் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

