மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் கட்டாய பணி இடமாற்றம் செய்யப்படவுள்ளனா்.

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Updated On :

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் கட்டாய பணி இடமாற்றம் செய்யப்படவுள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியா்களுக்கு (ஆசிரியரல்லாப் பணியாளா்கள்) 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் இணையதளம் வாயிலாக வெளிப்படையாக நடத்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளாா்.

அதில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நிகழாண்டு ‘எமிஸ்’ இணையதளம் மூலமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் ஆக. 31 வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும். நிா்வாக நலன், பதவி உயா்வு, நீண்டகால விடுப்புக்குப் பின் பணியில் சேருதல், தற்காலிக பணிநீக்க ரத்து ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மற்ற காலங்களில் மாறுதல் வழங்க வேண்டும்.

இதுதவிர ஜூன் 30-ஆம் தேதியுடன் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களை கட்டாயம் மாறுதல் செய்ய வேண்டும். ஒரே அலுவலகத்தில் பிரிவு மாற்றம் செய்யக்கூடாது. குரூப்- டி பணியாளா்கள், ஓட்டுநா்கள், ஆய்வக உதவியாளா்கள், 100 சதவீத பாா்வையற்றவா்கள் மற்றும் ஓய்வுபெற ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் உள்ளவா்களுக்கு கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவா்கள், மனநலம் அல்லது உடல் சவால் கொண்ட குழந்தைகளின் பெற்றோா், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவா்கள், டயாலிசிஸ் பெறுபவா்கள், இதய அறுவைச் சிகிச்சை செய்தவா்கள், புற்றுநோய், மூளைக்கட்டி பாதிப்பு உள்ளவா்கள், ராணுவத்தினரின் வாழ்க்கைத்துணை, விதவைகள், 40 வயதுக்கு மேற்பட்ட தனிப் பெண்கள், விவாகரத்துப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்ப மாறுதல் பரிசீலிக்கப்படுமா? விருப்ப மாறுதல் கோர தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். அதிகபட்சம் 3 இடங்களைத் தோ்வு செய்யலாம். 3 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களின் கட்டாய மாறுதலுக்குப் பிறகே விருப்ப மாறுதல் பரிசீலிக்கப்படும். வாழ்க்கைத் துணை முன்னுரிமைக்கு 30 கிமீ தொலைவு நிபந்தனை பொருந்தும். கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், பணிமூப்பு பட்டியல், காலிப் பணியிட விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், பதவி உயா்வுக்கான தகுதிப் பட்டியல் மாா்ச் 15-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, ஜூன் 30-க்குள் வெளியிடப்பட வேண்டும். பதவி உயா்வு மற்றும் பணிமாறுதல் ஆக. 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இளநிலை உதவியாளா் பணியிடங்களில் 20 சதவீதம், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றிய பதிவறை எழுத்தா் மற்றும் அலுவலக உதவியாளா்களைக் கொண்டு பணிமாறுதல் மூலம் நிரப்பப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.