தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை!
திருச்செந்தூர் முருகன் கோயில் நிகழ்ச்சிகளில் தனி மனிதத் துதிபாடல்கள் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருப்பது பற்றி...

திருச்செந்தூர் கோயில் - கோப்புப் படம்
திருச்செந்தூர் முருகன் கோயில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகத்திற்குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனி மனிதத் துதிபாடல்களையோ கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும் என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் சிலர், இறைபக்திப் பாடல்களுக்கு இடையே ஆன்மிகத்திற்குத் தொடர்பில்லாத சில கோஷ வாக்கியங்களை எழுப்பினர்.
இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியிலும் பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. புனிதமான கோயில் வளாகத்தில் இத்தகைய கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திருக்கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதுபோன்ற சர்ச்சைகள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்க கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழாண்டிற்கான சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள், பொதுவெளியில் விமர்சனங்களை ஏற்படுத்தி திருக்கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.
எனவே, இனிவரும் காலங்களில் திருக்கோயிலால் ஒழுங்கு செய்யப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள், இறைபக்தி வசனங்கள் மற்றும் இறைபக்திப் பாடல்களைத் தவிர ஆன்மிகத்திற்குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனி மனிதத் துதிபாடல்களையோ கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The temple administration has banned songs praising individuals at events held at the Tiruchendur Murugan Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


