2 நாள்கள் விடுமுறை, 8 மணி நேர வேலை.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிர்பார்க்காத அறிவிப்புகள்!
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை, 2 நாள்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
டாஸ்மாக் ஊழியர்கள்.
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை, மாதம் 2 நாள்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக வருவாய் வரும் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பல்வேறு முறைகேடுகள், பாட்டிலுக்கு ரூ. 10 பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை, கடை வாடகை உள்ளிட்டவைகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. பாட்டிலுக்கு ரூ. 10 பெற்றுவந்த பிரச்னைக்குத் தீர்வாக டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியமும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் உத்தரவின் அடிப்படையில், கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநேர சீரமைப்பு, விடுப்புகள், முன்பணம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் டிச. 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகளாக வருகிற டிச. 1-ஆம் தேதி முதல் 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதம் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், மாதம் 2 மணி நேர அனுமதி, பொங்கல் மற்றும் தீபாவளிக்கு தலா ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம், மருத்துவச் செலவுகளுக்கான உதவி ஆகிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விடுப்பு, முன்பணம் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான நடைமுறைகளை அமல்படுத்த டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடை ஊழியர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே இருக்கும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் நிலையில், பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணி செய்வார்கள். முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், மூன்றாவது ஷிப்ட் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கும். கையடக்கக் கருவி மூலம் ஆன்லைன் வருகைப் பதிவு செய்யப்படும்.
ஒரு ஷிப்டில் குறைந்தது இரண்டு பணியாளர்கள் இருக்க வேண்டும், கடையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை மூன்று ஷிப்ட்களுக்கும் சமமாக பிரித்து பணி அமர்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, நிதி உதவிகளைப் பொறுத்தவரை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு தலா 10,000 ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The TASMAC Managing Director has issued a circular stating that shop employees will be granted one day off per week, as well as two days of paid casual leave per month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

