
மதுவை ஒழிக்க சௌமியா அன்புமணி முயற்சிக்கு தமிழகம் துணை நிற்க வேண்டும்! - அன்புமணி
'மது இல்லாத் தமிழகம்' என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தொடங்கவுள்ளது தொடர்பாக...
அன்புமணி | சௌமியா - கோப்புப் படம்
'மது இல்லாத் தமிழகம்' என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தொடங்கவுள்ளார். மதுவை ஒழிக்கும் நோக்குடன் அவர் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த உன்னத முயற்சியை ஆதரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டிற்கு மிகவும் முக்கியமான செல்வம் கல்வி தான். ஆனால், மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால், அந்த கல்வியே கூட தேவையில்லை; நாடு மது இல்லாமல் இருந்தால் போதுமானது என்பதே எனது நிலைப்பாடு என்று முழங்கியவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். மது இல்லாத இந்தியா என்ற கொள்கையில் அந்த அளவுக்கு உறுதியாக இருந்த காந்தியடிகளின் பிறந்த நாளான (அக்.2) நாளை, 'மது இல்லாத் தமிழகம்' என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தொடங்கவுள்ளார். மதுவை ஒழிக்கும் நோக்குடன் அவர் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த உன்னத முயற்சியை ஆதரிக்க வேண்டுகிறேன்.
தமிழ்நாடு இன்று எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளில் முதன்மையானது என்னவென்றால், மதுவால் ஏற்படும் கேடுகள் என்று ஐயத்திற்கு இடமின்றி கூறிவிடலாம். அந்த அளவுக்கு மதுவால் சமூக, சுகாதார, பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் இளம் விதவைகள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு தான். நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளும், தற்கொலைகளும் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். இவை அனைத்துக்கும் முதன்மைக் காரணம் மது தான் என்பதை மறுக்க முடியாது. பெண்களுக்கு எதிராக கணவர்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முதன்மைக் காரணம் மது தான் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மதுவால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் இன்னும் கொடுமையானவை. 7 வகையான புற்றுநோய்கள், இதய நோய், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட 200 வகையான நோய்கள் மது குடிப்பதால் ஏற்படுகின்றன. மது குடிப்பதால் மட்டும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர், அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் தேடித் தருபவர்களாக இருப்பதால், அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான 54 லட்சம் பேருக்கு மருத்துவம் தேவைப்படுகிறது.
மது வணிகத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரை வருமானம் கிடைப்பதால், அதை தவிர்க்க முடியாது என்றொரு அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. இதை ஏற்கவே முடியாது. மது மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், அதனால் மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளை சரி செய்வதற்காக மட்டும் ரூ.1.08 லட்சம் அரசுக்கு செலவாகிறது என்றும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் அளவு ரூ.72,000 கோடி என்றும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விட 3 மடங்கு இழப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மதுப்பழக்கம் உள்ளவர்களின் குடும்பங்களில் 85%-க்கும் கூடுதலானவை தாங்க முடியாத கடன்சுமையில் தவிக்கின்றன. அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கு மருத்துவம் செய்வதற்கு தேவையான பணம் அவர்களிடம் இல்லை.
தமிழ்நாட்டின் இன்றைய பொருளாதார மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்து, இயல்பான அளவில் பணி செய்தால், தமிழக பொருளாதாரம் ரூ.53.30 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்ந்திருக்கும். அதாவது, மதுப்பழக்கம் மட்டுமே தமிழகத்தின் பொருளாதாரத்தை 30%, அதாவது ரூ.12.30 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது என்பதில் இருந்தே நாடும், வீடும் வாழ்வதற்காக மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணரலாம்.
இவை அனைத்தையும் விட இன்னொரு பெரும் அச்சுறுத்தலை மதுவால் தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இரு தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகி விட்ட நிலையில், இப்போதுள்ள மூன்றாம் தலைமுறையும் மதுவுக்கு அடிமையானால், தமிழர்களின் மரபணுவில் மதுப் பழக்கம் பதிவாகிவிடும் என்றும், அதன்பின் தமிழர்களை மதுப்பழக்கத்திலிருந்து மீட்க முடியாது என்றும் பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்திருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
One of the greatest threats facing Tamil Nadu today is undoubtedly the devastating impact of alcohol. Alcohol consumption has caused enormous social, health and economic damage.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





