நெல்லையில் படைக்கப்பட்ட சாதனை! 120 போதையில்லா கிராமங்கள் உருவாக்கம்!
நெல்லையில் 120 போதையில்லா கிராமங்கள் உருவாக்கப்பட்டு சாதனை

120 போதையில்லா கிராமங்கள்
நெல்லை மாவட்டத்தில் 120 போதையில்லாத கிராமங்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, போதைப்பொருள் விற்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சரக டிஐஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை சரகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையாக முதற்கட்டமாக 120 போதை இல்லா கிராமங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகவும் நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரில் லக்ஷ்மி பல் மருத்துவமனை மற்றும் பொருநை ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் ‘போதையில்லா நெல்லை’ மெகா விழிப்புணர்வு ஓவிய நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவராம் கலைக்கூடத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, போதைப்பொருள் தீமைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவிய அட்டைகளை ஒன்றிணைத்துப் பின்புறமாகத் திருப்பி வைத்தபோது, மகாத்மா காந்தியின் உருவம் பிரம்மாண்டமாக உருவானது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு மாணவ, மாணவிகளின் படைப்புகளைப் பார்வையிட்டுப் பாராட்டினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "போதைப்பொருளைப் பயன்படுத்தக் கூடாது, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன, சிறந்த வாழ்க்கைக்கு எத்தகைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை விளக்கும் வகையில் குழந்தைகள் அற்புதமாக ஓவியங்களை வரைந்துள்ளனர். சுமார் 70 குழந்தைகள் வரைந்த அட்டைகளைத் திருப்பி பின்புறம் அடுக்கியபோது அங்கே மகாத்மா காந்தியின் உருவம் உருவானது வியப்பளிக்கிறது. போதைக்கு எதிராகப் பல கரங்கள் ஒன்றிணையும்போது மகாத்மா காந்தியின் கொள்கை பின்னணியில் துணைநிற்கும் என்ற கருத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது. திறமை வாய்ந்த குழந்தைகள் பல சாதனைகளைப் படைத்து, போதைக்கு எதிராகப் பெரிய முன்னெடுப்பைக் கொண்டு வந்திருப்பது பெருமையளிக்கிறது.
போதைப்பொருளே இல்லாத சமூகம் உருவாகும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு போலீசார் சார்பில் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு பணிகளைத் தாண்டி போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதே நமது நோக்கம். நெல்லை சரகத்தில் ஏர்வாடி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளை முடக்குவதுடன், மீண்டும் அவர்கள் இச்செயல்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகள் பாய்கின்றன.
போதை இல்லா கிராமங்கள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 120 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்டமாக அடுத்த கிராமங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தென்காசியில் அந்த கிராம மக்களைச் சந்தித்துப் பேச உள்ளோம். வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கிராமங்களிலும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இளஞ்சிறார்களுக்கு போதை மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியாக மிகக் கடுமையான சிறைத் தண்டனை பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






